டி20யில் மட்டுமல்ல.. டெஸ்டிலும் சொதப்பும் இந்திய பேட்டர்கள் ; புஜாரா – ஸ்ரேயாஷ் நிதானம்… முதல் நாளின் கடைசி பந்தில் ஷாக் கொடுத்த வங்கதேசம்!!

Author: Babu Lakshmanan
14 December 2022, 4:55 pm
Quick Share

வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில், இந்திய அணி 6 விகெட் இழப்பிற்கு 278 ரன்களை எடுத்துள்ளது.

வங்கதேசத்திற்கு எதிரான டி20 தொடரை இழந்த இந்திய கிரிக்கெட் அணி, தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சட்டோகிராமில் இன்று தொடங்கியது. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கேஎல் ராகுல் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

அதன்படி, களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. கில் (20), கேஎல் ராகுல் (22) அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர். பின்னர் வந்த கோலியும் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

5வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த புஜாரா – பண்ட் ஜோடி நிதானமான ஆடி ரன்களை சேர்த்தது. பண்ட் 46 ரன்கள் எடுத்திருந்த போது எதிர்பாராதவிதமாக ஆட்டமிழந்தார்.
இதைத் தொடர்ந்து, புஜாராவுடன் ஸ்ரேயாஷ் ஜோடி சேர்ந்து விளையாடினார். இருவரும் ஆமை போல ஆடி ரன்களை மெதுவாக சேர்த்தனர். ஒரு கட்டத்தில் இருவரும் அரைசதம் அடித்த நிலையில், 90 ரன்கள் எடுத்திருந்த புஜாரா தனது விக்கெட் பறிகொடுத்தார்.

முதல் நாள் ஆட்டம் முடிய 5 ஓவர்கள் மட்டுமே எஞ்சியிருந்ததால், மேற்கொண்டு இந்திய அணி விக்கெட்டை பறிகொடுக்காமல் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முதல் நாள் ஆட்டத்தின் கடைசி பந்தில் அக்ஷர் படேல் (14) ஆட்டமிழந்தார். இதனால், இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 278 ரன்கள் எடுத்திருந்தது. ஸ்ரேயாஷ் ஐயர் 82 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார்.

வங்கதேசம் அணி தரப்பில் தைஜுல் இஸ்லாம் 3 விக்கெட்டுக்களும், மெகிதி ஹாசன் 2 விக்கெட்டும், காலித் அகமது ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

Views: - 344

0

0