‘பகுத்தறிவு எங்கே போனது?’… திமுகவை மறைமுகமாக தாக்கிய நடிகை கஸ்தூரி.. பரபரக்கும் அரசியல் களம்!!!

Author: Babu Lakshmanan
14 December 2022, 5:44 pm
Quick Share

கஸ்தூரி

நடிகை கஸ்தூரி பிரபல சமூக நல ஆர்வலர் என்பது அனைவரும் அறிந்த விஷயம்.

விளையாட்டுத்துறை விமர்சகரான அவர் பெண்கள் மற்றும் சிறார்களுக்கு இழைக்கப்படும் அநீதி மற்றும் குற்றங்களுக்கு எதிராக உரக்க குரல் கொடுப்பவரும் ஆவார். நாட்டு நடப்புகள் குறித்து அவ்வப்போது கஸ்தூரி தனது ட்விட்டர், முகநூல் பக்கங்களில் தெரிவிக்கும் கருத்துகள் பல நேரங்களில் சிந்திக்க வைப்பதாகவும், அரசியல்வாதிகளுக்கு நெற்றியடி கொடுப்பது போலவும் இருக்கும்.

அதேசமயம் மக்களுக்கு மிகவும் பரிச்சயமான நிகழ்வு குறித்து யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் அவர் நாசூக்காக விமர்சிப்பதும் வழக்கம். அவற்றில் நிறையவே கிண்டலும், கேலியும் கலந்திருக்கும்.

இரண்டு தினங்களுக்கு முன்பு சென்னை மேயர் ப்ரியா, மூத்த ஐஏஎஸ் அதிகாரி ககன் தீப் சிங் இருவரும் முதலமைச்சரின் பாதுகாப்பு வாகனத்தில் தொங்கிக் கொண்டு பயணம் செய்தது குறித்து தனது மனக் குமுறலை கஸ்தூரி கொட்டித் தீர்த்து இருந்தார்.

முட்டு மன்னர்கள்

அவர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “நான் இன்று உடன்பிறப்புகளுக்கு விசிறியாகி விட்டேன். உண்மையாக. பட்டில் இத்தனை விதமா, பட்டு மாளிகை என்றெல்லாம் என்று டி நகரில் விளம்பரப்படுத்துவார்கள்.

இனி முட்டில் இத்தனை விதமா?முட்டு மன்னர்கள் என்று கெத்தாக காலரை தூக்கி விட்டுக்கொள்ளலாம், திமுக கூட்டணியினர். இதையே வேறு யாரும் செய்திருந்தால்… பெண்ணியம் என்று கும்மியிருப்பார்கள் பெரியாரிஸ்டுகள். மாண்டோஸ் புயலைவிட பெரிய புயலையும் கிளப்பியிருப்பார்கள்.

சிறுத்தைகள் ஒரு பக்கம் PCA Case போட்டு கொடும்பாவி கொளுத்தியிருப்பார்கள். ஆனால் என்ன பண்ணுறது, எல்லாவற்றையும் விழுங்கிக்கொண்டு பிதுக்கினாலும் ஒதுக்கினாலும் மூடிக்கொண்டு பொறுத்து போக வேண்டிய நிலை இப்பொழுது!

ப்ரியா இடத்தில் கனிமொழி வருவாரா? அப்படி வந்தால் இப்படித்தான் ஆஹா சிங்க பெண், என்னமா சர்க்கஸ் செய்யுது என்று புளங்காகிதம் அடைவார்களா உடன்பிறப்புகள்? மூத்த வயதில் மதிப்புக்குரிய IAS அதிகாரி, மாநகராட்சி கமிஷனர், footboard-ல் தொத்திக் கொண்டு போனார் பாவம். இத்தனை வருட நேர்மைக்கும் சேவைக்கும் கடைசியில் அவருக்கு கிடைத்தது footboard தான். அதை இளைஞர்கள் உதயநிதியோ, சபரீசனோ செய்வார்கள் என்று கனவிலும் நினைத்து பார்க்க முடியுமா?

அப்போ ஊருக்கு உபதேசம் உள்ளுக்குள் இரட்டை வேடம் இதுதான் திராவிட மாடல் என்றுதான் புரிந்துக்கொள்ள வேண்டியுள்ளது. இந்த அரசுதான் traffic fines எல்லாத்தையும் ஏத்தினாங்க.

ஹெல்மெட் போடலைனா சீட் பெல்ட் போடலையின்னா ஆயிரக் கணக்கில் வசூலிக்கும் போலீஸ், வெறும் கருப்பு கண்ணாடிக்கு நடிகர் விஜய்க்கு அபராதம் போட்ட கடமையுணர்வுமிக்க சென்னை போலீஸ், இப்போ இந்த கூத்துக்கு பாதுகாப்பு அல்லவா குடுத்திச்சு! ஆக… மொத்தத்தில் திராவிட மாடல் என்பது பெண்களை, IAS அதிகாரிகளை, சாலை விதிகளை எல்லாவற்றையும் அவமதித்து மக்களுக்கு தவறான ஆபத்தான முன்னுதாரணமாக இருப்பதுதானா என்று மக்கள் அங்கலாய்ப்பதில் ஆச்சரியம் என்ன?” எனக் கேள்வி எழுப்பி இருந்தார்.

அவருடைய இந்த அதிரடி கருத்து அனைத்து சமூக ஊடகங்களிலும் வைரலானது.
பெரும்பாலான நெட்டிசன்கள் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தனர்.
இப்படி சொல்வதற்கு ஒரு தைரியம், துணிச்சல் வேண்டும், சபாஷ் கஸ்தூரி! என்று பாராட்டவும் செய்தனர். அதேநேரம் அவருடைய பதிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடுமையாக தூற்றியவர்களும் ஏராளம்.

டிசம்பர் 14

இந்த பரபரப்பே இன்னும் ஓயாத நிலையில் கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் பொத்தாம் பொதுவாக ஒரு கருத்தை நேற்று பதிவிட்டு இருந்தார்.

அதில், “14th December 2022. Most auspicious day, 9.30 am excellent auspicious time. அடுத்தவன் என்றால் அது ஆரிய மாயை, சனாதனம், மூடநம்பிக்கை. நமக்கு என்றால் சுபயோக சுபதினம், சுபமுகூர்ததம் எல்லாம் பார்த்து தொடங்குவதே பகுத்தறிவு”என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

இந்தப் பதிவை அவர் டிசம்பர் 13-ம் தேதி மதியம் வெளியிட்டு இருக்கிறார்.

அதாவது டிசம்பர்14-ம் தேதி, காலை 9.30 மணி அளவில் தமிழகத்தில் ஏதோ ஒரு பெரிய அரசியல் நிகழ்வு நடக்க இருப்பதாக கருதி அதை நையாண்டி செய்வதுபோல
விமர்சனம் செய்துள்ளார்.

அவருடைய இந்தப் பதிவும், சமூக ஊடகங்களில் வைரலாகி ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான லைக்குகளை பெற்றுள்ளது. நூற்றுக் கணக்கானோர் அந்தப் பதிவை பிறருக்கு பகிர்ந்து கொண்டும் உள்ளனர்.

அதேபோல இந்த பதிவு கடும் விமர்சனத்திற்கும் உள்ளாகி இருக்கிறது. அவருடைய பதிவின் அர்த்தத்தை புரிந்துகொண்ட ஒரு சில அரசியல் கட்சியினர் அவரை வறுத்து எடுத்தும் வருகின்றனர்.

மறைமுக விமர்சனம்

இதுகுறித்து அரசியல் விமர்சகர்கள் கூறும்போது, “கஸ்தூரி டிசம்பர் 13-ம் தேதி வெளியிட்ட பதிவில், அரசியல் நெடி அதிகம் கலந்திருப்பதை உணர முடிகிறது. அதுவும் ஆரிய மாயை, சனாதனம் பகுத்தறிவு என்று அவர் கிண்டலடித்திருப்பது சிந்திக்க கூடிய ஒன்றாகவும் அமைந்துள்ளது.

அவர் சொல்வதைப் பார்த்தால், கடவுள் மறுப்பாளர்களையும், பின்னர் அவர்களே சந்தர்ப்ப சூழ்நிலைக்கு தகுந்தவாறு கடவுள் நம்பிக்கையை ஏற்றுக் கொண்டு இரட்டை வேடம் போடுவதை அம்பலப்படுத்தியதுடன் கேலி செய்து கிடுக்குப் பிடிக்க கேள்வி எழுப்பி இருப்பதையும் பார்க்க முடிகிறது.

எதற்காக அவர் இப்படி மறைமுகமாக சாடி இருக்கிறார் என்பது தெரியவில்லை.
இந்தப் பதிவால் தன்னைப் பற்றி அநாகரிகமான விமர்சனங்கள் சமூக ஊடகங்களில் எழலாம் என்பதை உணர்ந்தே அவர் பொதுப்படையாக இதுபோல் கேள்வி எழுப்பி இருக்கிறார் என்றே கருதத் தோன்றுகிறது.

மேலும் இருதினங்களுக்கு முன்பு முகநூலில் வெளியிட்ட அறிக்கையால் அவருக்கு மிகவும் கசப்பான அனுபவம் ஏற்பட்டிருக்கலாம். அதனால்தான் முன் எச்சரிக்கையாக யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் புத்திசாலித்தானமாக அவர் பல கேள்விகளை எழுப்பி இருக்கிறார் என்பதை யூகிக்கவும் முடிகிறது. எது எப்படியோ, அவருடைய இந்த பதிவு பொருத்தமான நேரத்தில்தான் வெளியாகி இருக்கிறது என்றே சொல்லவேண்டும்”என்று அந்த அரசியல் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.

அதேநேரம் இன்று காலை 9 மணி அளவில் கஸ்தூரி தனது முந்தைய நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டதுபோல ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார்.

அதில், “Best wishes to minister உதயநிதி ஸ்டாலின். தமிழக மக்களின் நலனை மனதில் வைத்து பொறுப்பான நேர்மையான அமைச்சராக செயல்பட வாழ்த்துகள். Above all, it is the people” என்று கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 428

0

0