இந்தியாவை வீழ்த்துமா இங்கிலாந்து… : முன்னாள் ஆஸி வீரர் கணிப்பு!

22 January 2021, 9:36 pm
Quick Share

இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் தொடரை வெல்லப்போவது யார் என முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் பிராட் ஹாக் கணித்துள்ளார்.

ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணி நான்கு போட்டிகள் கொண்ட தொடரை 2-1 எனக் கைப்பற்றி அசத்தியது. இந்நிலையில் இங்கிலாந்து அணி தற்போது இந்தியா வருகிறது. இதில் முதலில் இங்கிலாந்து அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டி வரும் பிப்ரவரி 5ஆம் தேதி சென்னையில் துவங்குகிறது. ஆஸ்திரேலிய அணியை வீழ்த்திய இந்திய அணி இங்கிலாந்து அணியைச் சொந்த மண்ணில் வீழ்த்தும் என ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

கடந்த 2012 முதல் பங்கேற்ற டெஸ்ட் தொடர்களில் எதிலும் இந்திய அணி தோல்வியைச் சந்தித்தது இல்லை. இந்திய அணி நிச்சயமாக இந்த தொடரை வெல்லும் என்ற எதிர்பார்ப்புடன் களமிறங்குகிறது. அதேநேரம் இங்கிலாந்து அணி ஜோ ரூட் தலைமையில் இலங்கைக்கு எதிரான முதல் போட்டியில் வெற்றி பெற்று அதிக தன்னம்பிக்கையுடன் உள்ளது. மேலும் கடந்த 2016 இல் இந்தியாவில் நடந்த டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 4- 0 எனப் படு மோசமான தோல்வியைச் சந்தித்தது. இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இங்கிலாந்து அணி இந்த முறை செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் இரு அணிகள் மோதும் இந்த டெஸ்ட் தொடரை கைப்பற்றும் அணியை முன்னாள் ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளரான பிராட் ஹாக் கணித்துள்ளார். இதுகுறித்து ஹாக் கூறுகையில், “என்னைப் பொறுத்தவரையில் இந்திய அணி தொடரை 3 -0 அல்லது 3 – 1 என்ற கணக்கில் கைப்பற்றும். மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெல்ல வாய்ப்பு உள்ளது. கடைசி டெஸ்டில் இந்திய அணி வெல்ல வாய்ப்பு உள்ளது. ஆனால் சென்னையில் நடக்கும் முதல் இரண்டு டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி நிச்சயமாக வெல்லும்.

ஆனால் 3 – 1 என இந்திய அணி இந்த தொடரைக் கைப்பற்றி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு செல்ல வாய்ப்பு உள்ளது”என்றார். இதற்கிடையில் உலகச் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இந்திய அணி முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் நியூசிலாந்து அணியும் மூன்றாவது இடத்தில் ஆஸ்திரேலிய அணி உள்ளது. நான்காவது இடத்தில் இங்கிலாந்து அணி உள்ளது.

Views: - 4

0

0