கேப்டனாக தேறுவாரா ரிஷப் பண்ட்… ரிக்கி பாண்டிங்கின் கணிப்பு!

Author: Udhayakumar Raman
31 March 2021, 2:09 pm
Quick Share

கேப்டன் பொறுப்பு கண்டிப்பாக ரிஷப் பண்ட்டை ஒரு சிறந்த பேட்ஸ்மேனாக உதவு கைகொடுக்கும் என டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணிக்குக் கடந்த 6 மாதங்களுக்கு மேலாகப் பல வெற்றிகளில் கைகொடுத்து வருகிறார் இளம் ரிஷப் பண்ட். இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் போட்டிகளிலிருந்து மோசமான பார்ம் காரணமாகத் தனது இடத்தை இழந்தார் பண்ட். ஆனால் கடந்த சில மாதங்களாக டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்குச் சாத்தியமில்லாத வெற்றிகளைப் பெற்று வரலாறு படைக்கக் காரணமாக இருந்து மீண்டும் தற்போது போராடி இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியை மற்றும் டி20 அணிகளில் இடம் பிடித்துள்ளார்.

பண்ட் இடம்பிடித்தது மட்டுமல்லாமல் தனக்கென்று ஒரு முத்திரையைப் பதித்து அந்த வெற்றியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார் எனலாம். இதன் விளைவாக ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வழிநடத்தும் பொறுப்பு பண்ட்டை தேடி வந்துள்ளது. ஸ்ரேயாஸ் ஐயர் காயம் அடைந்த காரணத்தினால் ரிஷப் பண்ட்டை அந்த அணியின் கேப்டனாக நியமித்துள்ளது. கேப்டன் பொறுப்பு அவரை ஒரு சிறந்த பேட்ஸ்மேனாக வளர்த்துக்கொள்ளக் கைகொடுக்கும் என அந்த அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் மற்றும் டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் வெளியிட்டுள்ள பதிவில், “எதிர்பாராதவிதமாக ஸ்ரேயாஸ் இந்த தொடரைத் தவறவிடும் நிலை உருவாகியுள்ளது. ஆனால் ரிஷப் பண்ட் இந்த சிறந்த வாய்ப்பை எப்படிப் பயன்படுத்திக் கொள்ள இருக்கிறார் என்பதைப் பார்க்க ஆர்வமாக உள்ளேன். இவரது சமீபத்திய கடுமையான போராட்டத்திற்கு இந்த வாய்ப்பு தகுதியானது தான். இவர் இந்த தொடரில் அதிக தன்னம்பிக்கையுடன் களமிறங்க உள்ளார். இந்த கேப்டன் பொறுப்பு என்பது அவரை ஒரு மிகச்சிறந்த வீரராக உருவாக்கிக்கொள்ளச் சிறந்த வாய்ப்பாக அமையும் என நம்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில் டெல்லி கேப்டன் அணியில் அனுபவ வீரர்களான அஸ்வின், ஷிகர் தவான் மற்றும் அஜின்கியா ரகானே, ஸ்டீவ் ஸ்மித் உள்ளிட்ட வீரர்கள் இடம் பெற்றிருந்த போதும், டெல்லி அணி இளம் வீரரான ரிஷப் பண்ட்டுக்கு கேப்டன் பொறுப்பை வழங்கும் துணிச்சலான முடிவை எடுத்துள்ளது. ரிஷப் பண்ட்டின் பயமற்ற துணிச்சலான தன்மை தான் அவருக்கு கேப்டன் பொறுப்பை வழங்கியதற்குக் காரணம் என உரிமையாளர் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த வாய்ப்பை ரிடம் ரிஷப் பண்ட் எப்படி பயன்படுத்திக் கொள்ள உள்ளார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Views: - 238

1

0