பும்ராவிடம் பிடித்த விஷயம்… கொஞ்சம் பயமாகத் தான் இருக்கு… ஆர்ச்சர் சொன்ன விஷயம் என்ன தெரியுமா!

2 February 2021, 9:43 pm
Quick Share

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ராவை தனக்குப் பிடிக்கும் என்றும் அதை ஒப்புக்கொள்ளத் தான் தயங்கவில்லை என்றும் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஜோஃப்ரா ஆர்ச்சர், இந்திய கிரிக்கெட் அணியின் ஜஸ்பிரீத் பும்ரா தங்களுக்கு என்று குறுகிய காலத்தில் முத்திரை பதித்த வேகப்பந்து வீச்சாளர்கள். கடந்த 2016ல் இந்திய கிரிக்கெட் அணிக்காக ஜஸ்பிரித் பும்ரா அறிமுகமானார். தொடர்ந்து இரண்டு ஆண்டுகளில் டெஸ்ட் அரங்கில் தனது வேகத்தில் மிரட்டினார். தற்போது அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் உலகில் சிறந்த வீரராகத் திகழ்ந்து வருகிறார்.

இதேபோல ஆர்ச்சரும் வெகு தொலைவில் இல்லை. கடந்த 2019 இல் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணி இவர் மீது நம்பிக்கை வைத்துப் பல சிக்கல்களுக்கு இடையில் விளையாடும் லெவனில் இவரைச் சேர்த்தது. இவர் மீது தேர்வுக் குழுவினர் வைத்த நம்பிக்கையை நம்பிக்கைக்குப் பாத்திரமாக இவர் 11 போட்டிகளில் பங்கேற்று 20 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். தொடர்ந்து ஆஷஸ் தொடரில் அறிமுகமானார். தனது முத்திரையை அங்கும் பதித்தார். இந்நிலையில் இந்த இரு வேகப்பந்து வீச்சாளர்கள் இடம் பெற்றுள்ள இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற உள்ளதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

இந்நிலையில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ராவை தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும், அதை ஒப்புக்கொள்ளத் தான் தயங்கவில்லை என்றும் ஆர்ச்சர் தெரிவித்துள்ளார். காணொளிக்காட்சி மூலம் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அர்ச்சரிடம் பும்ராவை பிடிக்குமா எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு ரத்தினச் சுருக்கமாக ஆம் என்று பதிலளித்தார். அதேபோல அவரிடம் மிகவும் பிடித்த விஷயம் குறித்து கேள்வி எழுப்ப, அவரின் தொடர்ச்சியான சிறந்த வெளிப்பாடு தான் மிகவும் பிடிக்கும் என்று யோசித்துப் பதிலளித்தார் ஆர்ச்சர்.

இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் எந்த வீரர் அச்சுறுத்தலானவராகக் கருதுகிறீர்கள் எனக் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதில் அளித்த ஆர்ச்சர், இதிலென்ன சந்தேகம் முதல் ஆறு பேட்ஸ்மேன்களும் தான். ஆனால் இந்திய ஆடுகளத்திற்கு ஏற்ப இங்கிலாந்து பவுலர்கள் சரியான திட்டமிடல் செய்துள்ளனர். முதலில் எங்கள் அணி ஒரு கூட்டத்தை நடத்தியது. இதேபோல போட்டி தொடங்குவதற்கு முன்பாகவும் மீண்டும் ஒரு கூட்டம் நடத்தப்படும். மீண்டும் ஒரு கூட்டம் நடத்தப்படவுள்ளது. அப்போது ஆடுகளம் எப்படி உள்ளது என்பதைப் பார்த்து அதற்கேற்ப திட்டத்தை வகுத்து அதை அப்படியே செயல்படுத்த முயல்வோம். அதில் மாற்றங்கள் தேவைப்பட்டால் அதற்கு ஏற்ப மாறுதல்களைச் செய்து கொள்வோம்” என்றார்.

Views: - 0

0

0