அத்தியாயம் முடிந்தது : ஐதராபாத் அணியில் இருந்து விடுவிப்பு… வார்னர் உருக்கமான கருத்து..!!

Author: Babu Lakshmanan
1 December 2021, 5:55 pm
Quick Share

ஐதராபாத் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டது தொடர்பாக அந்த அணியின் முன்னாள் வீரர் வார்னர் கருத்து தெரிவித்துள்ளார்.

கடந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் போது, சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தாததால், ஐதராபாத் அணியின் ஆடும் லெவனில் இருந்து வார்னர் கழற்றி விடப்பட்டார். முதலில் கேப்டன் பதவியை பறித்த அணி நிர்வாகம், பிறகு அவர் மீண்டும் ஆடும் லெவனில் இடம்பெற மாட்டார் என்று அறிவித்ததை தொடர்ந்து கிரிக்கெட் ரசிகர்கள் அதிருப்தியடைந்தனர். மேலும், தன்னை ஒதுக்கியதால், மனம் வெறுத்துப் போன அவர், மைதானத்திற்கு வராமல் ஓட்டல் அறையிலேயே தங்கி விட்டதாகவும் சொல்லப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல், எதிர்வரும் சீசனில் ஐதராபாத் அணியில் இருந்து வார்னரை நீக்கவும் அணி நிர்வாகம் முடிவு செய்ததாக தகவல் வெளியாகியது. ஆனால், வார்னர் தொடர்ந்து ஐதராபாத் அணியில் நீடிக்கவே விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால், அதனை அணி நிர்வாகம் பொருட்டாகக் கூட எடுத்துக் கொள்ளவில்லை. இதனால், அவரது ரசிகர்கள் கடுப்பாகினர்.

அணி நிர்வாகம் அறிவித்தபடியே, வில்லியம்சன் (ரூ.14 கோடி), அப்துல் சமத் (ரூ.4 கோடி), உம்ரான் மாலிக் (ரூ.4 கோடி) ஆகியோரை தவிர்த்து வார்னர், ரஷித் கான் என மற்ற அனைவரையும் வெளி விட்டது. இது வார்னருக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. சர்வதேச போட்டிகளில் இன்னும் விளையாடாத வீரர்களுக்கு கொடுத்த முக்கியத்துவம் கூட, ஒரு அனுபவமிக்க வீரருக்கு தர மறுப்பதா..? என்று வார்னருக்கு ஆதரவாக ரசிகர்கள் வசை பாடி வருகின்றனர்.

இந்த நிலையில், ஐதராபாத் அணியில் இருந்து தன்னை விடுவிக்கப்பட்டது தொடர்பாக வார்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதாவது, “கதை முடிந்தது. இத்தனை வருடங்களாக ஆதரவளித்த சன்ரைசர்ஸ் ரசிகர்களுக்கு நன்றி. அது தன்னை பெரிதும் ஊக்கப்படுத்தியது,” எனக் குறிப்பிட்டிருந்தார்.

தற்போது மெகா ஏலத்தின் பட்டியலில் இருக்கும் அவரை எடுக்க இரு புதிய அணிகளும் கடும் போட்டி போடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Views: - 1111

0

0