பஞ்சாப் பவுலர்களை பஞ்சாக்கி பறக்கவிட்ட தவான்: இமாலய இலக்கை அசால்ட்டா எட்டிய டெல்லி!

18 April 2021, 11:16 pm
Quick Share

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில், டெல்லி கேபிடல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

இந்தியாவில் 14 வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் மும்பையின் வான்கடே மைதானத்தில் நடந்த 11வது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி பீல்டிங் தேர்வு செய்தது.

டெல்லி அணியில் சொதப்பல் டாம் கரணுக்கு பதிலாக ஸ்டீவ் ஸ்மித் அணியி ல் இடம் பெற்றார். இதேபோல மெரிவாலாவும் அணியில் சேர்க்கப்பட்டார். பஞ்சாப் அணியில் அஷ்வினுக்கு பதிலாக ஜலஜ் சக்சேனா சேர்க்கப்பட்டார்.

ராகுல் – மாயங்க் அபாரம்
இதையடுத்து களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு கேப்டன் கே எல் ராகுல் (61), மாயங்க் அகர்வால் (69) ஆகியோர் அரைசதம் அடித்து கைகொடுக்க பஞ்சாப் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 195 ரன்கள் அடித்தது. ஷாருக் கான் (15), கூடா (22) அவுட்டாகாமல் இருந்தனர். டெல்லி அணிக்கு கிறிஸ் வோக்ஸ், மெரிவாலா, ரபாடா, அவேஷ் கான் ஆகியோர் தலா 1 விக்கெட் சாய்த்தனர்.

தவான் மிரட்டல்
எட்டக்கூடிய இலக்கை துரத்திய டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு பிரித்வி ஷா (32) சுமாரான துவக்கம் அளித்தார். தொடர்ந்து வந்த ஸ்டீவ் ஸ்மித் (9) வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த கேப்டன் ரிஷப் பண்ட் நல்ல கம்பெனி கொடுக்க, எதிர்முனையில் ஷிகர் தவான் அதிரடியாக ரன்கள் சேர்த்தார்.

இதையடுத்து டெல்லி அணியின் ஸ்கோர் சீரான வேகத்தில் அதிகரித்தது. இந்நிலையில் 49 பந்தில் 13 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் என 92 டன்கள் எடுத்த நிலையில் ரிச்சர்ட்சன் வேகத்தில் போல்டானார். இதையடுத்து முகமது ஷமி வீசிய போட்டியின் 17வது ஓவரில் 2 நோ பால் உட்பட ஸ்டோனிஸ் 20 ரன்கள் அடிக்க போட்டி டெல்லி வசம் சென்றது.

தொடர்ந்து ரிச்சர்ட்சன் வீசிய போட்டியின் 18 ஓவரின் முதல் பந்திலேயே ரிஷப் பண்ட் (15) அவுட்டானார். தொடர்ந்து வந்த லலித் யாதவ் வந்த வேகத்தில் ஒரு பவுண்டரி அடித்தார். இதையடுத்து டெல்லி கேபிடல்ஸ் அணி 18.2 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 198 ரன்கள் அடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் வான்கடே மைதானத்தில் இரண்டாவது அதிகபட்ச இலக்கை வெற்றிகரமாக எட்டி அசத்தியது டெல்லி கேபிடல்ஸ் அணி.

Views: - 79

1

0