‘நான் எப்பவுமே ‘தல’ தாண்டா’..!! மும்பையை வீழ்த்தி 100வது வெற்றியைப் பதிவு செய்தார் தோனி !!

19 September 2020, 11:28 pm
Quick Share

அபுதாபி : ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் மும்பை அணிக்கெதிரான முதல் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது.

கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்ட ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கியது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் முதல் போட்டியில், சென்னை – மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பீல்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி, களமிறங்கிய மும்பை அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா ஏமாற்றம் அளித்தாலும், டிகாக் (33), திவாரி (42) ஆகியோர் ஓரளவிற்கு தன் குவித்த நிலையில், நடுத்தர வீரர்கள் ஏமாற்றம் அளித்தனர். இதனால், மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் சேர்த்தது.சென்னை அணி தரப்பில் இங்கிடி 3 விக்கெட்டும், சாகர் மற்றும் சாகல் தலா 2 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இதைத்தொடர்ந்து, களமிறங்கிய சென்னை அணிக்கு, வாட்சன், முரளி விஜய் ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஆரம்பமே அதிர்ச்சி கொடுத்தனர். இதையடுத்து, ஜோடி சேர்ந்த ராயுடு, டுபிளசிஸ் மும்பை அணியின் பந்து வீச்சை எளிதாக எதிர்கொண்டு ரன்களை குவித்தனர். இருவரும் 100 ரன்களுக்கு மேல் எடுத்தனர். ராயுடு 71 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், டூபிளசிஸ் மற்றும் சாம் கரணின் அதிரடியால் சென்னை அணியின் வெற்றி எளிதானது. இறுதியில், சென்னை 19.1 ஒவர்களில் 163 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. டூபிளசிஸ் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 58 ரன்கள் எடுத்திருந்தார்.