சர்வதேச கிரிக்கெட்டில் இந்த சாதனையைப் படைத்த முதல் இந்தியர் நடராஜன் தான் தெரியுமா?

15 January 2021, 7:25 pm
Quick Share

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் அறிமுகமான இந்திய வேகப்பந்துவீச்சாளர் நடராஜன் சர்வதேச கிரிக்கெட்டில், ஒரே தொடரில் மூன்று விதமான கிரிக்கெட்டிலும் அறிமுகமான முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்தார்.

இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடக்கிறது. இதன் முதல் நாள் ஆட்ட நேர முடிவில், ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்பிற்கு 274 ரன்கள் எடுத்துள்ளது. இந்நிலையில் இப்போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் அறிமுக வீரராகக் களம் இறங்கினார். இதன்மூலம் ஒரே தொடரில் மூன்று விதமான கிரிக்கெட்டிலும் சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமான முதல் இந்தியர் என்ற சாதனை படைத்தார். இந்நிலையில் முன்னதாக ஒருநாள் மற்றும் டி20 தொடரில் இந்திய அணிக்காக அறிமுகமான நடராஜன் டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இடம் பெறவில்லை. ஆனால் வீரர்களின் தொடர் காயம் காரணமாக அறிமுக வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது.

இவர் டெஸ்ட் அணியில் இடம்பெறவில்லை என்றாலும் இந்திய அணி வீரர்களுக்குப் பயிற்சி மேற்கொள்ளும் போது நெட் பவுலர் ஆக செயல்பட்டார். இந்நிலையில் டெஸ்ட் அரங்கில் இந்திய அணிக்காகக் களம் இறங்கும் 300ஆவது வீரர் என்ற பெருமையும் பெற்றார் நடராஜன். ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடர் போல டெஸ்ட் அரங்கிலும் தனது முதல் போட்டியிலேயே முத்திரையை பதித்தார் நடராஜன். முக்கியமான நேரத்தில் ஆஸ்திரேலியாவின் மேத்யூ வேட் மற்றும் மார்னஸ் லபுஷேன் ஆகியரின் விக்கெட்டை கைப்பற்றினார். இன்றைய முதல் நாள் ஆட்டத்தில் 20 ஓவர்கள் பவுலிங் செய்து 63 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தியுள்ளார் நடராஜன்.

இவரை ஐசிசி மற்றும் பிசிசிஐ தங்களது டிவிட்டர் பக்கத்தின் மூலம் வரவேற்பு அளித்துள்ளது. இதுதொடர்பாக ஐசிசி வெளியிட்ட டிவிட்டர் பதிவில், “டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு வரவேற்கிறோம். நடராஜன் மூன்று விதமான கிரிக்கெட்டிலும் ஒரே தொடரில் அறிமுகமாகியுள்ளார்” என அதில் குறிப்பிட்டுள்ளது. இதேபோல பிசிசிஐ வெளியிட்டுள்ள வாழ்த்து பதிவில், “நடராஜனுக்கு இது மிகச்சிறந்த மூன்றாக அமைந்தது. அவர் இந்திய அணிக்காகக் களம் இறங்கும் 300ஆவது வீரர் என்ற பெருமை பெற்றுள்ளார். இதைவிடச் சிறப்பாக அமைய முடியாது. தற்போது மூன்று விதமான கிரிக்கெட் வீரராகியுள்ளார் நடராஜன்” என அதில் குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக நடராஜன் சர்வதேச கிரிக்கெட்டில் கடந்த டிசம்பர் மாதம் 2 ஆம் தேதி கான்பராவில் நடந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். அவர் அந்த போட்டியில் 10 ஓவர்கள் வீசி 70 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் சாய்த்தார். தொடர்ந்து நடந்த டி-20 தொடரில் இந்திய அணி 2-1 எனக் கைப்பற்றியது. இந்த தொடரிலும் பவுலிங்கில் சிறப்பாகச் செயல்பட்ட நடராஜன் மொத்தமாக 6 விக்கெட் சாய்த்து அசத்தினார்.

Views: - 6

0

0