‘எப்படி போனனோ, அப்படியே திரும்பி வந்துட்டேன்னு சொல்லு’..! அயர்லாந்தை எளிதில் வீழ்த்தியது இங்.,

31 July 2020, 2:17 pm
england vs ireland - updatenews360
Quick Share

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு நடுவே, நீண்ட இடைவேளைக்கு பிறகு இங்கிலாந்து கிரிக்கெட் அணி, அயர்லாந்துடனான கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடருக்காக, கடும் பாதுகாப்புகளுடன் அயர்லாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது.

சவுதம்டானில் இன்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் அயர்லாந்தை பேட்டிங் செய்யுமாறு கூறியது. அதன்படி, களமிறங்கிய அந்த அணியின் வீரர்கள் எதிரணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். 30 ரன் எடுப்பதற்குள்ளேயே முன்னணி 5 வீரர்களின் விக்கெட்டை இழந்து தடுமாறியது.

ஆனால், கேம்பர் மட்டும் பொறுப்புடன் விளையாடி கடைசி வரை ஆட்டமிழக்கமில்லாமல் 59 ரன்கள் குவித்தார். மற்றொரு முனையில் மெக் பிரின் 40 ரன்களை சேர்த்தார். இதன்மூலம், அந்த அணி 172 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இங்கிலாந்து சார்பில் வில்லே 5 விக்கெட்டும், சாகிப் முகமது 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்தனர். சாம் பில்லிங்சும், இயன் மார்கனும் இணைந்து வெற்றிக்கு அழைத்து சென்றனர். பில்லிங்ஸ் 67 ரன்னுடனும், இயன் மார்கன் 36 ரன்னுடனும் அவுட்டாகாமல் இருந்தனர். இறுதியில், இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுக்கு 174 ரன்கள் எடுத்து எளிதில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது. வில்லே ஆட்டநாயகன் விருது பெற்றார்.

Leave a Reply