பேர்ஸ்டோவ்… ஸ்டோக்ஸ் மிரட்டல் அடி: மண்ணைக்கவ்விய இந்திய அணி!

Author: Udhayakumar Raman
26 March 2021, 9:32 pm
Quick Share

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் பேர்ஸ்டோவ், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் மிரட்ட இங்கிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் போட்டியில் இந்திய அணி வென்றது. இரண்டாவது ஒருநாள் போட்டி புனேவில் நடந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவரில் 336 ரன்கள் குவித்தது. இந்திய அணிக்கு கே எல் ராகுல் (108) சதம் அடித்து கைகொடுத்தார்.

பேர்ஸ்டோவ் சதம்
இமாலய இலக்கை துரத்திய இங்கிலாந்து அணிக்கு ஜேசன் ராய் (55) நல்ல துவக்கம் அளித்தார். அடுத்து வந்த ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் கைகொடுக்க இந்திய பவுலர்களை ஈவு இறக்கம் இல்லாமல் பேர்ஸ்டோவ் பிரித்தார். மைதானத்தின் நாலாபுறத்துக்கும் பேர்ஸ்டோவ் சிக்சரளாக பறக்கவிட்டார்.

இதையடுத்து கொஞ்ச நேரத்தில் இந்த அதிரடியில் பென் ஸ்டோக்ஸும் கைகோர்க்க, இந்திய பவுலர்கள் இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் தவித்தனர். இதையடுத்து இங்கிலாந்து அணியின் ரன் வேகம் மின்னல் வேகத்தில் உயர்ந்தது. இந்நிலையில் 52 பந்தில் 4 பவுண்டர்கள், 10 சிக்சர்கள் விளாசியிருந்த போது பென் ஸ்டோக்ஸ் 99 ரன்களில் புவனேஷ்வர் வேகத்தில் விக்கெட்டை இழந்து வெளியேறினார்.

பட்லர் ஏமாற்றம்
அடுத்து வந்த கேப்டன் ஜாஸ் பட்லர் (0) பிரசித் கிருஷ்ணாவின் அசத்தலான யார்க்கர் மூலம் போல்டானார். தொடர்ந்து சதம் கடந்த ஜானி பேர்ஸ்டோவும் (124) விக்கெட்டை இழந்து வெளியேறிய போதும் இங்கிலாந்து அணி வெற்றியை நெருங்கியிருந்தது. பின் வந்த தாவித் மலான் (16*) மற்றும் லியாம் லிவிங்ஸ்டன் (27) கைகொடுக்க, இங்கிலாந்து அணி 43.3 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 337 ரன்கள் அடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

இதன் மூலம் இங்கிலாந்து அணி தனது அதிக பட்ச இலக்கை வெற்றிகரமாக எட்டி புது வரலாறு படைத்தது. தவிர, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும் 1-1 என சமன் செய்தது.

Views: - 216

0

0