கோலி ‘டக் அவுட்’… புஜாரா, ரஹானே ஏமாற்றம்… இந்திய அணி நிதானமான ஆட்டம்!

5 March 2021, 11:37 am
Quick Share

இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்டில் இந்திய அணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இந்திய அணி 2-1 என முன்னிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத்தின் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடக்கிறது.

இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் ஜோ ரூட் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். இந்த போட்டியிலும் இந்திய சுழற்பந்து வீச்சைச் சமாளிக்க முடியாத இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 205 ரன்களுக்கு சுருண்டது.

இதையடுத்து முதல் இன்னிங்சை துவக்கிய இந்திய அணிக்கு சுப்மான் கில் (0) இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் வேகத்தில் அவுட்டாகி வெளியேறினார். முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 1 விக்கெட்டுக்கு 24 ரன்கள் எடுத்து 181 ரன்கள் பின் தங்கியிருந்தது. ரோஹித் சர்மா (8), புஜாரா (15) அவுட்டாகாமல் இருந்தனர்.

கோலி ஏமாற்றம்
இன்றைய இரண்டாவது நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்சை தொடர்ந்த இந்திய அணிக்கு புஜாரா (17) லீச் சுழலில் சிக்கினார். அடுத்து வந்த இந்திய கேப்டன் விராட் கோலி, ரன் எதுவும் எடுக்காமல் ஸ்டோக்ஸ் வேகத்தில் அவுட்டானார். ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் ரோஹித் சர்மா நங்கூரமாக நிலைத்து நின்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இவருக்கு நல்ல கம்பெனி கொடுத்த ரஹானே (27) ஆண்டர்சன் வேகத்தில் அவுட்டானார்.

இரண்டாவது நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 80 ரன்கள் எடுத்து 125 ரன்கள் பின் தங்கியுள்ளது. ரோஹித் சர்மா (32) அவுட்டாகாமல் உள்ளார்.

ஸ்டோக்ஸ் சாதனை
இந்த போட்டியில் இந்திய கேப்டன் கோலியை அவுட்டாக்கிய ஸ்டோக்ஸ் டெஸ்ட் அரங்கில் அவரை ஐந்தாவது முறையாக அவுட்டாக்கினார். இவர் முன்னதாக ஆஸ்திரேலியவின் மைக்கேல் கிளார்க், தென் ஆப்ரிக்காவின் டுபிளசி, டீன் எல்கர், இந்தியாவின் புஜாராவை 4 முறை அவுட்டாக்கியுள்ளார்.

இரண்டு டக்
இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் கோலி இரண்டாவது முறையாக டக் அவுட்டானார். இதற்கு முன் கடந்த 2014 இல் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் லியம் பிளங்கட், ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோரின் பந்தில் கோலி ரன் எதுவும் எடுக்கும் முன் அவுட்டானார். தற்போது இந்த தொடரில் மொயின் அலி, பென் ஸ்டோக்ஸ் பந்தில் கோலி ரன் எதுவும் எடுக்கும் முன் அவுட்டாகியுள்ளார்.

Views: - 1

0

0