ரூ. 6454 கோடி வருவாய் இழப்பைச் சந்தித்துள்ள ஃபார்முலா-1!

27 February 2021, 8:26 pm
Quick Share

கொரோனா வைரஸ் காரணமாகக் கடந்தாண்டில் ஃபார்முலா-1 கார்பந்தயத்தின் வருமானம் சுமார் 43 சதவீதம் குறைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மதிப்பு சுமார் ரூ. 6454 கோடிகள் ஆகும்.

ஆண்டுதோறும் உலகின் பல்வேறு பகுதிகளில் முன்னணி கார்பந்தயமான ஃபார்முலா-1 கார்பந்தயம் நடத்தப்பட்டு வருகிறது. கடந்தாண்டு (2020) இந்த கார்பந்தயத்தில் மொத்தமாக சுமார் 22 சுற்றுப்போட்டிகள் நடத்தப்படுவதாக இருந்தது. அதற்கு முந்தைய ஆண்டில் (2019) ஃபார்முலா-1 கார்பந்தயத்தில் மொத்தமாக 21 சுற்றுப்போட்டிகள் நடத்தப்பட்டிருந்தன.

இந்நிலையில் இந்தாண்டு (2021) 23 சுற்றுப்போட்டிகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் கடந்தாண்டு (2020) பரவிய கொரோனா வைரஸ் காரணமாக வெறும் 17 சுற்றுப்போட்டிகள் மட்டுமே நடத்தப்பட்டன. குறிப்பாக அதிக வருமானம் ஈட்டிக்கொடுக்கும் மொனாகோ மற்றும் சிங்கப்பூர் சுற்றுப்போட்டிகள் ரத்துசெய்யப்பட்டன. மேலும் கொரோனா பரவல் காரணமாக நடத்தப்பட்ட போட்டிகளும் பெரும் பாலும் ரசிகர்கள் இல்லாமலேயே நடத்தப்பட்டன.

இதனால் 2019 ஆம் ஆண்டு ஃபார்முலா-1 கார்பந்தயத்திற்கு கிடைத்த வருமானமான ரூ. 14,881 கோடியை விடக் கடந்த ஆண்டு சுமார் 43 சதவீதம் குறைவாகவே அதாவது ரூ. 8,426 கோடி மட்டுமே 2020 இல் வருமானமாகக் கிடைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் ஃபார்முலா-1 கார்பந்தயத்திற்கு கடந்தாண்டு ரூ. 6,454 கோடி வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில் கடந்தாண்டில் குறைக்கப்பட்ட போட்டிகள் எண்ணிக்கை, ரசிகர்கள் இல்லாத போட்டிகள், சீசனின் மொத்த நேரம் உள்ளிட்ட ஃபார்முலா-1 கார்பந்தயத்தின் பிரதான வருவாய் அளிக்கும் சூழல் பாதிக்கப்பட்டதால் இந்த மிகப்பெரிய இழப்பைச் சந்தித்துள்ளதாகத் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டெபானோ தெரிவித்துள்ளார். மேலும் இந்த முறை திட்டமிட்டபடி அனைத்து போட்டிகளும் நடத்தப்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்தாண்டுக்கான ஃபார்முலா-1 கார்பந்தய தொடர்கள் வரும் மார்ச் 28 ஆம் தேதி பக்ரைனில் துவங்கவுள்ளது.

Views: - 1

0

0