இரண்டு வருஷத்துக்குப் பின் வெஸ்ட் இண்டீஸ் அணியில் மீண்டும் சூறாவளி கெயில்!

27 February 2021, 8:24 pm
Gayle - updatenews360
Quick Share

இலங்கை அணிக்கு எதிராக நடக்க உள்ள டி20 சர்வதேச தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியின் கிறிஸ் கெயில் பெயர் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பின் வெஸ்ட் இண்டீஸ் அணியில் முதல்முறையாக கிறிஸ் கெயில் இடம்பெற்றுள்ளார்.

சமீபத்தில் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மற்றும் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் தொடர்களில் சிறப்பாக செயல்பட்ட வெஸ்ட் இண்டீஸ் அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் கிறிஸ் கெயில் , தற்போது இலங்கை அணிக்கு எதிராக நடக்க உள்ள டி-20 தொடருக்கான அணியில் இடம்பெற்றுள்ளார். கரீபிய தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கிறது.

இந்த தொடர் வரும் மார்ச் 3ஆம் தேதி துவங்குகிறது. இதற்கான 14 பேர் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணியை அந்த நாட்டு கிரிக்கெட் போர்ட் தற்போது வெளியிட்டுள்ளது. இதில் கெய்ரன் போலார்டு கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அந்த அணியின் சீனியர் வேகப்பந்து வீச்சாளரான பிடல் எட்வர்ட்ஸ் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார். இவர் சுமார் ஒன்பது ஆண்டுகளுக்குப் பின்பு மீண்டும் சர்வதேச அணியில் இடம் பிடித்துள்ளார். இதேபோல அந்த அணியின் அதிரடி வீரரான கிறிஸ் கெய்ல் சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்பு மீண்டும் சர்வதேச அணியில் இடம் பிடித்துள்ளார்.

கிறிஸ் கெயில் கடைசியாகக் கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்றிருந்தார். அதன் பின்பு தற்போது வரை அவர் வெஸ்ட் இண்டீஸ் அணியின் இடம்பெறவில்லை. டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார் கிறிஸ் கெயில். 1999ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக அறிமுகமான கிறிஸ் கெயில் இதுவரை வெஸ்ட் இண்டீஸ் அணி 103 டெஸ்ட் போட்டிகளிலும், 301 ஒருநாள் போட்டிகளிலும் 58 சர்வதேச டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். இதற்கிடையில் இலங்கை அணிக்கு எதிராகப் பங்கேற்கும் ஒருநாள் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியையும் அறிவித்துள்ளது.

டி-20 அணி: கெய்ரன் போலார்டு (கே), நிகோலஸ் பூரன், பேபியன் ஆலன், டுவைன் பிராவோ, பிடெல் எட்வர்ட்ஸ், ஆண்ரே பிளட்சர், கிறிஸ் கெயில், ஜேசன் ஹோல்டர், அகீல் ஹொசைன், எவின் லீவிஸ், ஒபத் மெக்கே, ராவ்மன் பாவெல், லெண்டல் சிம்மன்ஸ், கெவின் சிங்க்லெயர்.

ஒருநாள் அணி: கெய்ரன் போலார்டு (கே), ஷேய் ஹோப், பேபியன் ஆலன், டேரன் பிராவோ, ஜேசன் ஹோல்டர், அகீல் ஹொசைன், அல்ஜாரி ஜேசப், எவின் லீவிஸ், கைல் மேயர்ஸ், ஜேசன் முகமது, நிகோலஸ் பூரன், ரோமிரோ செப்பர்ட், கெவின் சிங்க்லெயர்.

Views: - 1

0

0