“சிறு வயதிலிருந்தே நான் விரும்பிய அணியை நீதிமன்றத்திற்கு அழைத்து செல்ல விரும்பவில்லை” -மெஸ்ஸி..!

5 September 2020, 11:07 am
Quick Share

பார்சிலோனா கால்பந்து கிளப் அணியில் இருந்து விலக போவதில்லை என, பிரபல கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி தெரிவித்துள்ளார்.

பார்சிலோனா கால்பந்து கிளப் அணிக்காக 16 ஆண்டுகளாக விளையாடி வரும் அர்ஜென்டீனாவின் லியோனல் மெஸ்ஸி, ஒப்பந்தத்தை ரத்து செய்து அந்த அணியில் இருந்து விலகுவதாக கடந்த வாரம் அறிவித்திருந்தார்.

அர்ஜென்டீனா தேசிய கால்பந்து அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸிக்கு தற்போது 33 வயது ஆகிறது. தனது 13வது வயதிலேயே ஸ்பெயினில் உள்ள புகழ்பெற்ற பார்சிலோனா கால்பந்து கிளப்பில் இணைந்தார். அங்கு தீவிர பயிற்சி பெற்றவர் 17 வயதில் சீனியர் அணிக்காக கடந்த 2004 ஆம் ஆண்டு தனது முதல் போட்டியில் அறிமுகமானார்.

இதுவரை பார்சிலோனாவுக்காக 731 போட்டிகளில் விளையாடி 634 கோல் அடித்து சாதனை படைத்துள்ளார். இதில் லா லிகா சாம்பியன்ஷிப்பில் மட்டுமே 444 கோல் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பார்சிலோனாவுடனான ஒப்பந்தம் 2021 ஜூன் வரை நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில், லா லிகா தொடரில் 2வது இடம் பிடித்தது மற்றும் சாம்பியன்ஸ் லீக் காலிறுதியில் 2-8 என பேயர்ன் மியூனிக் அணியிடம் பரிதாபமாக தோற்றது மெஸ்ஸியை விரக்தியடைய செய்தது. அதனால் அவர் அணி மாறப்போவதாக மீண்டும் தகவல்கள் பரவின.

இந்நிலையில், மெஸ்ஸி தனது வக்கீல் மூலம் பார்சிலோனா அணி நிர்வாகத்துக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பி அதன் மூலம் அணியுடனான ஒப்பந்தத்தை ரத்து செய்து கொள்வதாக தெரிவித்திருந்தார்.

இந்த சூழலில், தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு மெஸ்ஸி பேட்டி அளித்துள்ளார். அதில், ஒப்பந்ததை ரத்து செய்து விலகுவதில் சட்ட சிக்கல்கள் உள்ளதால் பார்சிலோனா அணியிலேயே தொடரப்போவதாக தெரிவித்துள்ளார்.

மேலும், தான் சந்தோஷமாக இல்லாத காரணத்தால் மட்டுமே அணியை விட்டு விலக முடிவு செய்ததாகவும், ஆனால் சிறு வயதில் இருந்தே தான் விரும்பிய அணியை நீதிமன்றம் வரை அழைத்து செல்ல விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளார். இதனால், அவரை தூக்கி செல்ல காத்திருந்த பிரபல கால்பந்து கிளப்புகள் பெரும் ஏமாற்றத்தை சம்பாதித்துள்ளது.

Views: - 9

0

0