இந்திய அணியின் வெற்றியை தடுத்த மழை: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி டிரா
Author: kavin kumar8 August 2021, 11:11 pm
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற வாய்ப்பிருந்த நிலையில் மழை காரணமாக ஆட்டம் டிரா ஆனது.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள்
கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் நடந்து வந்தது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 183 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. பின்னர் ஆடிய இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 278 ரன்கள் எடுத்தது. பின்னர் தனது 2வது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி 303 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ஜோ ரூட், தனது 21-வது சதத்தை நிறைவு செய்து 109 ரன்களில் ஆட்டமிழந்தார்.இதையடுத்து இந்திய அணி வெற்றி பெற 209 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 2-வது இன்னிங்ஸை நேற்று தொடங்கிய இந்திய அணி, ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 52 ரன்கள் சேர்த்தது.
ரோகித் சர்மா, புஜாரா தலா 12 ரன்களுடன் களத்தில் இருந்தனர். இன்று கடைசி நாள் ஆட்டம் தொடங்க இருந்தது. 9 விக்கெட் கைவசம் இருக்கும் நிலையில், 157 ரன்கள் எடுத்தால் வெற்றிபெறலாம் என்ற நிலையில், இந்திய அணியின் கனவை மழை கலைத்தது. நாட்டிங்காமில் காலையில் இருந்து தொடர்ந்து மழை பெய்து வருவதால், இன்றைய போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால் போட்டி டிரா ஆனது. இந்திய அணியில் வெற்றி வாய்ப்பு மழையால் பறிபோனதால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.
0
0