நீண்ட நாட்களுக்கு பிறகு சதத்தை நெருங்கிய புஜாரா.. போட்டியை தன்வசப்படுத்த போராடும் இந்திய அணி…!!

Author: Babu Lakshmanan
28 August 2021, 9:09 am
Quick Share

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியை தன்வசப்படுத்த இந்திய அணி போராடி வருகிறது.

இரு அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கியது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, களமிறங்கிய இந்திய பேட்ஸ்மென்களுக்கு இங்கிலாந்து பவுலர்கள் சிம்ம சொப்பனமாக திகழ்ந்தனர். ரோகித் சர்மாவை தவிர்த்து பிற வீரர்கள் வந்த வேகத்தில் நடையை கட்டினர். இறுதியில் இந்திய அணி 78 ரன்களுக்கு சுருண்டது.

இதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள், பர்ன்ஸ் (61) மற்றும் ஹமீது (68) சிறப்பாக தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். பின்னர் வந்த மலன் (70), கேப்டன் ஜோ ரூட் (121) என ரன்களை குவிக்க, இங்கிலாந்து அணி 432 ரன்கள் சேர்த்துள்ளது. இதன்மூலம், இந்திய அணியை விட இங்கிலாந்து 353 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

இந்த சூழலில், 2வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணிக்கு இந்த முறையும் தொடக்கம் சரியாக அமையவில்லை. கேஎல் ராகுல் 8 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். மதிய உணவு இடைவேளை வரை இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 34 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர், ரோகித் சர்மா – புஜாரா ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருவரும் அரைசதம் விளாசினர்.

ரோகித் சர்மா 59 ரன்னில் ஆட்டமிழந்ததை தொடர்ந்து, புஜாராவுடன் கேப்டன் கோலி ஜோடி சேர்ந்தார். இருவரும் விக்கெட்டுக்கள் விளாமல் பார்த்துக் கொண்டனர். இதனால், 3வது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் சேர்த்துள்ளது. புஜாரா 91 ரன்னுடனும் கோலி 45 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

இன்னும் இரு தினங்கள் எஞ்சியுள்ள நிலையில், இன்றைய நாள் முழுவதும் இந்தியா பேட்டிங் செய்யும் பட்சத்தில், போட்டியை சமன் செய்ய முடியும்.

Views: - 373

0

0