கேப்டன் பொறுப்பில் இருந்து விராட் கோலி விலகல் : பேட்ஸ்மேனாக விளையாட விரும்புகிறேன்… கோலி வெளியிட்ட உருக்கமான கடிதம்..!!

Author: Babu Lakshmanan
16 September 2021, 6:26 pm
Quick Share

சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் டி20 போட்டிக்கான கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் என மூன்று விதமான போட்டிகளுக்கும் விராட் கோலி கேப்டனாக இருந்து வருகிறார். இதனால், அவரது ஆட்டத்திறன் பாதிக்கப்படுவதாக விமர்சனங்கள் எழுந்து வந்தன. அவர் மீதுள்ள கூடுதல் பொறுப்புகளினால் தான் கடந்த இரு ஆண்டுகளாக டெஸ்ட் போட்டிகளில் கோலி சதமடிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், தனது பேட்டிங்கில் கூடுதல் செலுத்தும் நோக்கில் விராட் கோலி, டி20 மற்றும் ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பொறுப்பில் இருந்து விலக இருப்பதாக தகவல் வெளியாகியது. அதாவது, ஒருநாள் மற்றும் டி20 போட்டிக்கான கேப்டன் பொறுப்பு ரோகித் சர்மாவுக்கு வழங்கப்பட இருப்பதாகவும், கோலி டெஸ்ட் அணியின் கேப்டனாக தொடருவார் என்றும் கூறப்பட்டு வந்தது. 20 ஓவர் உலக கோப்பை தொடருக்குப் பிறகு தனது பதவி விலகல் முடிவை விராட் கோலி அறிவிக்க இருப்பதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் டி20 போட்டிக்கான கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :- இந்திய அணியின் கேப்டனாக என் உச்சபட்ச திறமைக்கு ஏற்றவாறு பணியாற்றுள்ளேன். எனது கேப்டன் பயணத்தில் ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஏனெனில் அவர்கள் இல்லையெனில், கேப்டனாக நான் எதையும் செய்திருக்க முடியாது. எனது அணி வீரர்கள், உதவி பணியாளர்கள், தேர்வுக்குழுவினர், பயிற்சியாளர்கள் மற்றும் இந்தியா வெற்றி பெற பிரார்த்தனை நடத்திய ஒவ்வொருவருக்கும் நன்றி.

கடந்த 8 முதல் 9 ஆண்டுகளாக 3 ஃபார்மெட்ஸ்களிலும் விளையாடியுள்ளேன். பணி நெருக்கடியை புரிந்து கொள்வது ஒரு வீரருக்கு மிகவும் முக்கியமானது. கடந்த 5 முதல் 6 வருடங்களாக கேப்டனாக பல்வேறு பணி நெருக்கடிகளிலும் விளையாடியுள்ளேன். தற்போது, டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான கேப்டனாக தொடர்ந்து செயல்பட முழுமையாக தயாராகியுள்ளேன். அதேவேளையில், டி20 அணியில் ஒரு சாதாரண வீரராக களமிறங்க முடிவு செய்துள்ளேன்.

டி20 கேப்டன் பொறுப்பில் இருந்து விலகும் முடிவை எடுக்க ரொம்ப நேரம் தேவைப்பட்டது. எனக்கு நெருக்கமானவர்களான பயிற்சியாளர் ரவிசாஸ்திரி, ரோகித் சர்மா உள்ளிட்டோரின் கலந்து பேசி இந்த முடிவை எடுத்துள்ளேன். டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பிறகு கேப்டன் பொறுப்பில் இருந்து விலகவிருக்கிறேன். இது தொடர்பாக பிசிசிஐ தலைவர் கங்குலி, செயலாளர் ஜெய்ஷா ஆகியோரிடம் பேசியுள்ளேன். இந்திய கிரிக்கெட்டிற்காகவும், இந்திய அணிக்காகவும் என்னால் முடிந்த பணிகளை ஆற்றுவேன், எனக் குறிப்பிட்டுள்ளார்.

கேப்டன் கோலியின் இந்த முடிவு அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேவேளையில், கேப்டன் நெருக்கடி இல்லாமல் அவர் சிறப்பாக விளையாடுவார் என்ற எதிர்பார்ப்பையும் அவர்களிடத்தில் ஏற்படுத்தியுள்ளது.

Views: - 407

0

0