2வது வெற்றியை பெறுமா சென்னை சூப்பர் கிங்ஸ் : இன்று டெல்லியுடன் மோதல்..!

25 September 2020, 5:38 pm
Quick Share

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன.

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இதுவரை 2 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை மும்பைக்கு எதிரான போட்டியில் வெற்றியும், ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் தோல்வியும் தழுவியுள்ளது.

ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் தோல்வியை தழுவியதற்கு மோசமான பந்து வீச்சே காரணமாக இருந்தது. அதேபோல, பெரிய இலக்கை நோக்கி ஆடும் அணிக்கு சிறந்த தொடக்கமும் அமைய வில்லை. காயம் காரணமாக விலகியிருக்கும் அம்பத்தி ராயுடு இல்லாததது பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், சென்னை அணி தனது 3வது லீக் ஆட்டத்தில் இன்று டெல்லியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியிலும் ராயுடு இடம்பெறுவது சந்தேகமாகவே உள்ளது. தொடக்க வீரர் முரளி விஜய் இந்தப் போட்டியில் சோபிக்காவிட்டால், வெற்றி பெறுவது கடினமானது தான். மேலும், சென்னை அணியின் பந்து வீச்சை வலுப்படுத்த, மூத்த சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிரை இன்று தோனி களமிறக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், கடந்த போட்டியில் 7வது வீரராக களமிறங்கியதால் கடும் விமர்சனத்திற்குள்ளான தோனி, இந்தப் போட்டியில் முன்கள வரிசையில் இறங்கி அதிரடி காட்டுவாரா..? என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

இந்தப் போட்டியில் 2வது வெற்றிக்காக சென்னை, டெல்லி அணிகள் பலப்பரீட்சை நடத்தும் என்பதால், ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.