ரியான் பிராக் மற்றும் ராகுல் திவாத்தியா அதிரடி : ஹைதராபாத்தை வீழ்த்தி ராஜஸ்தான் அணி வெற்றி!!

11 October 2020, 8:24 pm
Rajasthan- Updatenews360
Quick Share

துபாயில் நடைபெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதலில் டாஸ் வென்று பேட் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர்கள் டேவிட் வார்னர் மற்றும் மணீஷ் பாண்டே பொறுப்பாக விளையாடினர். இந்த ஜோடி ஆரம்ப அடித்தளத்தை அழகாக விளையாடியதால் 73 ரன்களை சேர்த்தனர்.

வார்னர் 48 ரன்னில் ஆட்டமிழக்க, மறு முனையில் இருந்து மனீஷ் பாண்டே அரைசதம் அடித்தார். பின்னர் பேர்ஸ்டோ 16 ரன்னில் வெளியேற, மனீஷ் பாண்டேவும் 54 ரன்னில் அவுட் ஆனார். நிர்ணயம் செய்யப்பட்ட 20 ஓவரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 158 ரன் எடுத்தது.

159 என்ற சுலபமான இலக்கோடு களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. முதல் வரிசையில் வந்த பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, ஸ்மித் ரன் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார்.

அந்த அணியின் நம்பிக்கை நாயகனான சஞ்சு சாம்சன் 26 ரன்களில் வெளியேற, உத்தப்பா வழக்கம் போல சொதப்பியதால் 18 ரன்னில் வெளியேறினார். பின்னர் வந்த ரியான் பிராக் மற்றும் ராகுல் திவாத்தியா அதிரடி ஆட்டத்தை காண்பித்தனர்.

இருவரும் 85 ரன்களை சேர்த்து அணியின் வெற்றிக்கு அடித்தளமிட்டனர். இறுதியாக 19.5 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்களை எடுத்து ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.