பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற மும்பைக்கு வாய்ப்பு எப்படி..? ராசியை எதிர்நோக்கும் ராஜஸ்தான்… குடைச்சலில் கொல்கத்தா..!!

Author: Babu Lakshmanan
6 October 2021, 6:05 pm
IPL - league - updatenews360
Quick Share

கடந்த சில நாட்களாக கிரிக்கெட் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வரும் ஐபிஎல் தொடர் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. அதாவது, லீக் சுற்றுகள் முடிவுக்கு வர உள்ள நிலையில், சென்னை அணி முதல் அணியாக பிளே ஆப்பிற்கு தகுதி பெற்று விட்டது. இதைத் தொடர்ந்து, டெல்லி மற்றும் பெங்களூரூ அணிகள் அடுத்தடுத்து அடுத்த சுற்றுக்குள் முன்னேறின.

தற்போது, 4வதாக இருக்கும் ஒரு இடத்திற்கு கொல்கத்தா, மும்பை, ராஜஸ்தான் அணிகளிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்த சூழலில், நேற்றைய ஆட்டத்தில் ராஜஸதான் அணியை 90 ரன்களுக்கு சுருட்டிய மும்பை அணி, 8.2 ஓவர்களில் 94 ரன்களை விளாசி மாபெரும் வெற்றியை பெற்றது. இதன்மூலம், 13 ஆட்டங்களில் விளையாடியுள்ள மும்பை அணி, 12 புள்ளிகளுடன் 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. அந்த அணியின் ரன்ரேட்டும் -0.048 ஆக உள்ளது.

ராஜஸ்தானுக்கு எதிராக இமாலய வெற்றி பெற்றிருக்கும் மும்பை அணிக்கு பிளே ஆஃப்பிற்கான வாய்ப்பு பிரகாசமாகியுள்ளதா..? என்ற கேள்வி அதன் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. ஆனால், அடுத்த சுற்றுக்கு முன்னேற மும்பைக்கு தடையாக இருப்பது கொல்கத்தா அணிதான்.

தற்போது, 12 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 4 இடத்தில் இருக்கும் கொல்கத்தாவின் ரன்ரேட் 0.294 ஆக உள்ளது. நாளை நடக்கும் ராஜஸ்தானுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் வெற்றி பெற்று விட்டாலே 14 புள்ளிகளுடன் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு அதிகமாகி விடும். அதாவது, ஒரு ரன் வித்தியாசத்தில் கொல்கத்தா வெற்றி பெற்றாலும், மும்பை அணி, ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் 87 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

ஒருவேளை, மும்பை, கொல்கத்தா அணிகள் தங்களின் கடைசி லீக் ஆட்டத்தில் தோல்வியடைந்தால், மும்பைக்கு பிளே ஆப் வாய்ப்பு அவ்வளவு எளிதாக கிடைத்து விடாது. மும்பை அணி ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தாலும், கொல்கத்தா ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 85 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்திருக்க வேண்டும்.

அதேவேளையில், மும்பை அணி கடைசி லீக்கில் தோல்வியடைந்து, கொல்கத்தாவை ராஜஸ்தான் அணி வீழ்த்தினால், 3 அணிகளும் 12 புள்ளிகளுடன் சமநிலை வகிக்கும். இப்படியிருக்கையில், பிளே ஆப்பிற்கு முன்னேற, ராஜஸ்தான் அணி தனது கடைசி லீக்கில் 125 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றே ஆக வேண்டும். அதுமட்டுமில்லாமல், மும்பை அணியும் 40 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத்திடம் தோல்வியடைய வேண்டும். இத்தனையும் நடந்தால் மட்டுமே ராஜஸ்தான் பிளே ஆஃப்பிற்கு முன்னேற முடியும்.

கிரிக்கெட்டில் கடைசி நிமிடம் வரை என்னவேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால், பிளே ஆஃப் சுற்றிற்கு போகப் போகும் அணி எது என்பது..? பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இன்றும், நாளையும் நடக்கும் லீக் ஆட்டங்கள் பெரும் பரபரப்பையே ஏற்படுத்தியுள்ளன.

Views: - 755

0

0