ஐபிஎல் மினி ஏலம் எங்கே? எப்போது? : பிசிசிஐ அதிகாரி அளித்த தகவல்!
22 January 2021, 6:31 pmஇந்த ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான மினி ஏலம் வரும் பிப்ரவரி 18ஆம் தேதி நடக்கும் என பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் ஆண்டுதோறும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடப்பது வழக்கம். கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் காரணமாக சுமார் 6 மாத தாமதத்திற்கு பின் ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த தொடரை பிசிசிஐ வெற்றிகரமாக நடத்தி முடித்தது. இந்நிலையில் இந்த ஆண்டு மெகா ஏலம் நடத்தப்பட இருந்தது. ஆனால் தற்போது ஐபிஎல் தொடர் துவங்கக் குறுகிய காலமே உள்ள நிலையில் இந்த மெகா ஏலத்தைத் திட்டமிட்ட படி நடத்த முடியாது என்பதால் இந்த மெகா ஏலத்தை அடுத்த ஆண்டு பிசிசிஐ ஒத்திவைத்தது.
அதற்குப் பதிலாக இந்த ஆண்டு மினி ஏலம் தான் நடத்தப்படும் என்று பிசிசிஐ முன்னதாகவே அறிவித்திருந்தது. மேலும் அடுத்த ஆண்டு (2022) ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் அணிகளில் 2 அணிகளை புதிதாக இணைக்கவும் பிசிசிஐ திட்டமிட்டு இருந்தது. ஆனால் நடைமுறைக்கு இது சாத்தியம் இல்லை என்பதால் அடுத்த ஆண்டு வெறும் ஒரு அணியை மட்டும் கூடுதலாகச் சேர்த்து போட்டிகளை நடத்த பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது. இதற்கிடையில் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் மினி ஏலம் பிப்ரவரி 18ஆம் தேதி நடக்கும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், “வரும் பிப்ரவரி 18ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. ஆனால் எங்கு நடத்தப்படும் என்பது குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை”என்றார். மேலும் ஐபிஎல் தொடரை இந்தியாவில் நடத்துவதா அல்லது வெளிநாடுகளில் நடத்துவதா என்பது குறித்தும் ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது. ஆனால் ஏற்கனவே பிசிசிஐ தலைவர் கங்குலி இந்த முறை இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரை நடத்த அனைத்து விதமான முயற்சிகளையும் மேற்கொள்வோம் எனத் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில் இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் தொடர் தற்போது இந்தியாவில் நடக்க உள்ளதால் இந்த முறை பிசிசிஐ எப்படியும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரை இந்தியாவிலேயே வெற்றிகரமாக நடத்தும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். சமீபத்தில் இந்த தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் தாங்கள் தக்க வைத்த வீரர்கள் பட்டியலை வெளியிட்டது. இதில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித், மேக்ஸ்வெல் என பல முன்னணி ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர்கள் விடுவிக்கப்பட்டனர். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் துவங்குவதற்கு முன்பாக ஆஸ்திரேலிய அணி வீரர்கள் பலர் விடுவிக்கப்பட்டுள்ளது அந்த அணி வீரர்களுக்குச் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
0
0