மீண்டும் எழுச்சி பெறுமா சென்னை அணி…? ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று ஐதராபாத்துடன் மோதல்..!

13 October 2020, 3:53 pm
srh - csk - IPL - updatenews360
Quick Share

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் ஐதராபாத் அணியை, சென்னை அணி எதிர்கொண்டு விளையாட இருக்கிறது.

இந்த சீசனை வெற்றியுடன் தொடங்கிய சென்னை அணி, அதன்பிறகு பஞ்சாபை மட்டுமே வெற்றி கொண்டது. அதாவது, 7 ஆட்டங்களில் விளையாடி, 2 வெற்றி, 5 தோல்வி என 4 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது. பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சென்னை அணி மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பி விட்டதாக, ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், அதன் பிறகு நடந்த இரு போட்டிகளிலும் தோல்வியடைந்து ஏமாற்றம் அளித்தது. அந்த அணியில் டூபிளசிஸ் மட்டுமே நல்ல ஃபார்மில் உள்ளார். எஞ்சிய வீரர்கள் யாரும் சொல்லும்படி விளையாடாததது பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சூழலில் பிளே ஆப்பிற்கான வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில், இன்று ஐதராபாத்தை எதிர்கொண்டு விளையாடுகிறது சென்னை அணி.

வார்னர் தலைமையிலான ஐதராபாத் அணி, 7 ஆட்டங்களில், 3 வெற்றி, 4 தோல்விகளை சந்தித்துள்ளது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் நல்ல பார்மில் இருந்து வருகின்றனர். அதேபோல, கலில் அகமது, நடராஜன், ரஷித் கான் ஆகியோர் பந்து வீச்சில் நன்கு செயல்பட்டு வருகின்றனர்.

எனவே, சென்னை அணிக்கு ஐதராபாத் அணி பெரும் சவாலாக இருக்கும். ஏற்கனவே, சென்னையை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய நம்பிக்கையில் இன்றைய போட்டியில் ஐதராபாத் களமிறங்கும். அதேவேளையில், தோல்விக்கு பதிலடி கொடுத்து, வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டிய முனைப்பில் சென்னை அணி விளையாடும்.