ஐபிஎல் கிரிக்கெட் : கோப்பையை வெல்லப்போவது யார்…? மும்பை – டெல்லி அணிகள் இன்று பலப்பரீட்சை!!

10 November 2020, 5:12 pm
MI-VS-dc - updatenews360
Quick Share

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் மும்பை – டெல்லி அணிகள் இன்று மோதுகின்றன.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக 13வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்து வருகிறது. பிளே ஆப் சுற்றுக்கள் முடிவடைந்த நிலையில், மும்பை – டெல்லி அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. நடப்பு தொடரில் மகுடத்தை சூடுப்போகும் அணி எது..? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப் போட்டி துபாயில் இன்று நடக்கிறது.

இந்தப் போட்டியில் ஏற்கனவே 4 முறை சாம்பியன்களான மும்பை இந்தியன்ஸ் அணி, இறுதிப் போட்டியில் 2010ம் ஆண்டில் மட்டுமே தோல்வியை சந்தித்துள்ளது. மற்ற அனைத்து முறையும் இறுதிப் போட்டியில் வெற்றியை பெற்று மகுடத்தை சூடியுள்ளது. இந்த சீசனிலும், வேறு எந்த அணிகளும் இல்லாத அளவிலான ஃபார்மில் மும்பை அணி திகழ்கிறது.

அதேவேளையில், முதல்முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள டெல்லி, இளம் பட்டாளத்தை வைத்து எப்படியாவது கோப்பையை வெல்லும் முனைப்பில் இருக்கிறது. ஆனால், இந்தத் தொடரின் ஆரம்பத்தில் விறுவிறுவென வீர நடைபோட்டிருந்தாலும், லீக் தொடரில் கடைசி கட்டங்களில் தடுமாற்றத்தை வெளிப்படுத்தி வந்தது. ஐதராபாத் அணிக்கு எதிரான தகுதி சுற்றில் பழைய ஃபார்முக்கு திரும்பி பெற்ற வெற்றி டெல்லி அணிக்கு புதிய நம்பிக்கையை அளித்து இருக்கும்.

நடப்பு சீசனில் இரு லீக் போட்டிகளிலும் டெல்லியை பந்தாடிய மும்பை அணி, முதலாவது தகுதிச் சுற்றிலும் தோற்கடித்தது. எனவே, இறுதிப் போட்டியிலும் டெல்லியை வீழ்த்தி, கோப்பையை வெல்ல முயற்சிக்கும். ஆனால், மும்பை அணிக்கு எதிரான 3 தோல்விகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, அந்த அணி வீரர்கள் எழுச்சி பெற்று விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை கோப்பையை வென்றிருக்கும் மும்பை அணி, இந்த முறையும் மகுடத்தை சூடி தனது ஆதிக்கத்தை நிலை நாட்டுமா? அல்லது முதல்முறையாக கோப்பையை வென்று நீண்ட நாள் தாகத்தை தீர்த்து டெல்லி அணி சரித்திரம் படைக்குமா? என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.

Views: - 22

0

0