டெல்லியை பழி தீர்த்து வெற்றிப் பாதையில் தொடர்ந்து பயணிக்குமா ராஜஸ்தான்..? இன்று பரபரப்பான ஆட்டம்…!!!!

14 October 2020, 1:15 pm
rr-vs-dc - updatenews360
Quick Share

சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய லீக் ஆட்டத்தில் டெல்லி – ராஜஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்து வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் எதிர்பார்த்த அணிகள் புள்ளிப்பட்டியலில் பின்தங்கியும், யாரும் எதிர்பார்க்காத அணிகள் முன்னேறியும் இருக்கின்றன. அதாவது, கடந்த சீசன்களில் இதுவரை வெளிப்படுத்தாத ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் டெல்லி அணி, 7 போட்டிகளில் 5ல் வெற்றி பெற்று, புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தை பிடித்துள்ளது.

அந்த அணியின் கீப்பர் ரிஷப் பாண்ட் தசைபிடிப்பினால் அவதிப்பட்டு வருவதால், அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. பாண்ட்டிற்கு மாற்று வீரராக அலெக்ஸ் கேரி களமிறக்கப்படுவதால், மற்றொரு வெளிநாட்டு வீரர் ஹெட்மயரை வெளியேற்ற வேண்டிய கட்டாயம் டெல்லிக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், நடுகள வரிசையில் டெல்லியின் பலம் குறைந்துள்ளது. இதன் தாக்கத்தினால், மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியே மிஞ்சியது.

அதேபோல, 7 ஆட்டங்களில் விளையாடி 3ல் தோல்வியை சந்தித்துள்ள ராஜஸ்தான் அணி, புது தெம்பை கொடுக்கும் விதமாக, பென் ஸ்டோக்சின் வருகை அமைந்துள்ளது. ஐதராபாத்திற்கு எதிரான போட்டியில் முன்னணி வீரர்கள் ஏமாற்றம் கொடுத்தாலும், ராகுல் திவேதியா, ரியான் பராக்கும் அணியை வெற்றி பெறச் செய்திருப்பது, ராஜஸ்தான் அணியின் நம்பிக்கையை உயர்த்தியுள்ளது.

இந்த சீசனில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியைச் சந்தித்துள்ள ராஜஸ்தான் அணி, அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்றைய ஆட்டத்தில் களமிறங்கும் என தெளிவாக தெரிகிறது.