தனது 1000வது போட்டியில் தோல்வியை சந்தித்த செரீனா வில்லியம்ஸ்!

13 May 2021, 11:34 am
Quick Share

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் தொடரில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் அர்ஜெண்டினாவின் நாடியா போட்ரோஸ்காவிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார்.

அமெரிக்காவின் முன்னணி நட்சத்திர வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் சுமார் மூன்று மாத இடைவெளிக்கு பின் முதல் முறையாக இத்தாலியன் ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்றார். 23 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ள செரீனா, இந்த போட்டியின் துவக்கம் முதலே சற்று தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இதற்கிடையில் கடந்த ஆண்டு பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதி வரை முன்னேறிய அர்ஜெண்டினாவின் நாடியா போட்ரோஸ்கா, செரீனா வில்லியம்ஸுக்கு எதிரான போட்டியில் ஆரம்பம் முதலே அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். டை பிரேக்கர் வரை நீடித்த முதல் செட்டை 7-6 என செரீனா இழந்தார். தொடர்ந்து நடந்த இரண்டாவது செட்டிலும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்திய செரீனா 7-5 என்று அந்த செட்டையும் கோட்டைவிட்டார்.

இறுதியில் அர்ஜென்டினாவின் நாடியா போட்ரோஸ்கா, அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸை 7-6, 7-5 என்ற நேர் செட்களில் வீழ்த்தினார். இதற்கிடையில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் பங்கேற்ற 1000வது போட்டி இதுவாக அமைந்தது. ஆனால் இந்த போட்டியில் செரீனா அதிர்ச்சி தோல்வியடைந்து இத்தாலியன் ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து வெளியேறினார். இவர் பங்கேற்ற 1000 போட்டிகளில் இவர் சந்தித்த 149 ஆவது தோல்வி இதுவாகும்.

முன்னதாக இந்த தொடரில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான நயோமி ஒசாகா அமெரிக்காவின் ஜெசிகாவிடம் 7-6, 6-2 என்ற செட் கணக்கில் தோல்வியை சந்தித்து தொடரில் இருந்து வெளியேறினார். சர்வதேச அளவில் ஒசாகா மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதும் களிமண் ஆடுகளத்தில் சற்று தடுமாறுகிறார் எனலாம். நான்கு முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ள ஒசாகா, ரோமில் நடந்த இரண்டாவது சுற்று போட்டியில் அதிர்ச்சி தோல்வி அடைந்ததோடு, மேட்ரிட் ஓபனிலும் தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 259

0

0