கொரோனாவால் ஜப்பானில் மே இறுதி வரை அவசர நிலை பிரகடனம் நீட்டிப்பு..! திட்டமிட்டப்படி ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுமா..?

8 May 2021, 5:50 pm
Yoshihide_Suga_UpdateNews360
Quick Share

கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரிப்பதைத் தடுக்க ஜப்பான் டோக்கியோவிலும் மற்றும் வேறு மூன்று பகுதிகளிலும் அவசரகால நிலையை மே இறுதி வரை நீட்டிப்பதாக அறிவித்துள்ளது. ஆனால் பிரதமர் யோஷிஹைட் சுகா இந்த கோடையில் டோக்கியோ ஒலிம்பிக்கை நடத்த இன்னும் சாத்தியம் இருப்பதாக மீண்டும் வலியுறுத்தினார்.

குறுகிய மற்றும் சக்திவாய்ந்த அவசரகால நிலை நான்காவது அலை நோய்த்தொற்றைத் தடுக்கும் என்று அரசாங்கம் நம்பியது. ஆனால் டோக்கியோ மற்றும் ஒசாகா போன்ற முக்கிய நகரங்களில் புதிய பாதிப்புகள் இன்னும் அதிக அளவில் உள்ளன என சுகா கூறினார்.

மே 11 முதல் மே 31 வரை அவசரகால நிலையை நீட்டிப்பதற்கு மத்தியில், ஜூலை 23 ஒலிம்பிக் விளையாட்டு தொடங்குவதற்கு இரண்டு மாதங்களுக்கும் குறைவான இடைவெளியை மட்டுமே கொண்டுள்ளது. ஒலிம்பிக் போட்டிகள் 2020’ஆம் ஆண்டில் தொற்றுநோய் காரணமாக இந்த ஆண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

விளையாட்டுகளைப் பற்றி தொடர்ந்து மக்கள் கவலைப்படுவதைப் பற்றிய செய்தி மாநாட்டில் ஒரு கேள்விக்கு பதிலளித்த சுகா, பொருத்தமான கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைப் பின்பற்றி ஜப்பான் பாதுகாப்பான முறையில் ஒலிம்பிக்கை நடத்த முடியும் என்ற தனது நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.

நேற்றைய நிலவரப்படி, ஒலிம்பிக்கை ரத்து செய்யக் கோரி ஜப்பானிய ஆன்லைன் மனுவில் 2,30,000 க்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டனர்.

ஜப்பான் மற்ற நாடுகளைப் போல தொற்றுநோயால் மோசமாக பாதிக்கப்படவில்லை. ஆனால் அதன் தடுப்பூசி போடும் பணிகள் மெதுவாக உள்ளது. ராய்ட்டர்ஸ் தரவுகளின்படி, இதுவரை சுமார் 126 மில்லியன் மக்கள்தொகையில் சுமார் 2% மட்டுமே குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி அளவைப் பெற்றுள்ளனர்.

நீட்டிக்கப்பட்ட அவசரகால நிலைமைகளின் கீழ், பார்கள், உணவகங்கள், கரோக்கி பார்லர்கள் மற்றும் மதுபானம் வழங்கும் பிற இடங்கள் மூடப்பட்டிருக்கும், இருப்பினும் பெரிய வணிக வசதிகள் குறுகிய காலங்களில் மீண்டும் திறக்கப்படலாம். கடுமையாக பாதிக்கப்பட்ட டோக்கியோ மற்றும் ஒசாகா இந்த பெரிய வசதிகளை தொடர்ந்து மூடி வைக்கும்.

Views: - 256

0

0