முதல் டெஸ்ட் போட்டிக்கு பின் இங்கிலாந்து அணியில் இணையும் பேர்ஸ்டோவ்!

29 January 2021, 7:48 pm
bairstow - updatenews360
Quick Share

இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்குப் பின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஜானி பேர்ஸ்டோவ் இங்கிலாந்து அணியுடன் இணைவார் என பேட்டிங் பயிற்சியாளராக தோர்ப் தெரிவித்துள்ளார்.

இந்திய அணிக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் ஜானி பேர்ஸ்டோவ் பங்கேற்க மாட்டார் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது இவர் இந்திய அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்க வாய்ப்பு உள்ளதாக அந்த அணியின் பயிற்சியாளர் தோர்ப் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தோர்ப் கூறுகையில், “இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக ஜானி பேர்ஸ்டோவ் இந்தியா வர உள்ளார். அவரின் வருகை முன்கூட்டியே திட்டமிடப்பட்டு உள்ளது” என்றார்.

இந்திய டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பேர்ஸ்டோவ் ஒதுக்கப்பட்டதையடுத்து பல முன்னாள் வீரர்கள் இங்கிலாந்து அணியைக் கடுமையாக விமர்சனம் செய்தனர். இலங்கை அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் கேப்டன் ஜோ ரூட்டிற்கு பின் அதிக ரன்கள் சேர்த்த வீரர் பேர்ஸ்டோவ் தான். இவர் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 139 ரன்கள் சேர்த்தார். ஆனால் இவர் இந்திய அணிக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டியில் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டதை அடுத்து முன்னாள் இங்கிலாந்து வீரர்களான நாசர் உசேன், கெவின் பீட்டர்சன், மைக்கேல் வான் ஆகியோர் கடுமையாக விமர்சனம் செய்தனர்.

இந்தியா போன்ற வலிமையான அணிக்கு எதிராகச் சிறந்த லெவன் வீரர்களைக் கொண்டு விளையாடவில்லை என்றால் இந்திய அணியிடம் இங்கிலாந்து அணி மண்ணை கவ்வும் நிலைதான் ஏற்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

கெவின் பீட்டர்சன் இங்கிலாந்து அணி சிறந்த லெவன் அணியைக் கொண்டு களம் இறங்க வில்லை என்றால் அது அவர்களை அவமதிக்கும் செயல் என்று தனது கருத்தை டிவிட்டர் பக்கம் மூலம் தெரிவித்துள்ளார். முன்னாள் கேப்டனான மைக்கேல் வான் இந்திய மண்ணில் சுழற்பந்து வீச்சைச் சிறப்பாக விளையாடும் ஒரு வீரரை ஒதுக்குவது சிறந்தது அல்ல. இது பைத்தியக்காரத்தனமாக சர்வதேச அரங்கில் பார்க்கப்படுகிறது என்று தெரிவித்தார்.

இந்நிலையில் இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் சென்னையில் உள்ள எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் நடக்கிறது. மூன்றாவது மற்றும் நான்காவது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நடக்கிறது. மூன்றாவது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக நடக்க உள்ளது. இந்த போட்டி வரும் பிப்ரவரி 24ஆம் தேதி துவங்குகிறது.

Views: - 18

0

0