பாக் தொடரில் இருந்து பாதியில் மும்பை புறப்பட்ட ரபாடா, நார்ட்கே!

5 April 2021, 8:37 pm
Quick Share

இந்தியாவில் நடக்கவுள்ள ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான அன்றிச் நார்ட்கே மற்றும் காகிசோ ரபாடா ஆகியோர் பாகிஸ்தான் தொடரிலிருந்து கிளம்பியுள்ளனர்.

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க தென் ஆப்பிரிக்க அணியை சேர்ந்த வீரர்கள் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் போது பாதியிலேயே வெளியேறினர். இதுதொடர்பாக டெல்லி கேபிடல்ஸ் அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “நார்ட்கே மற்றும் காகிசோ ரபாடா ஆகியோர் ஐபிஎல் தொடரில் பங்கேற்க தற்போதே கிளம்பியுள்ளனர்” என்று அதில் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான பயிற்சியை கடந்த வாரம் டெல்லி கேப்பிடல்ஸ் அணி மும்பையில் துவங்கி உள்ளது. இதன் முதல் பயிற்சியில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் துணை பயிற்சியாளர் முகமது கைப் தலைமையில் டெல்லி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர். இந்த பயிற்சி குறித்து முகமது கைப் கூறுகையில், “இந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு ஒரு படி முன்னேறி செல்ல திட்டமிட்டுள்ளோம். அதுவே எங்கள் அணியின் ஒட்டுமொத்த இலக்காக உள்ளது.

இந்த முறை ஐபிஎல் கோப்பையை வெல்லும் அளவு தகுதி படைத்த வீரர்கள் எங்கள் அணியில் உள்ளனர். கடந்த ஆண்டு இந்த இலக்கை நாங்கள் எட்டவிருந்தோம். ஆனால் கோப்பையை வெல்ல முடியவில்லை. இதற்கிடையில் இந்த ஆண்டு டெல்லி கேப்டல்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள ரிஷப் பண்ட் உள்ளிட்ட வீரர்கள் சர்வதேச அளவில் அதிக கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி நல்ல பார்மில் உள்ளனர். ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு முன்பாக மிகச்சிறந்த விஷயமாக இது பார்க்கப்படுகிறது.

கடந்த சில நாட்களாக டெல்லி அணி வீரர்கள் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். ஒரு பயிற்சியாளர் குழுவாக நாங்கள் இந்த முறை பீல்டிங்கில் இன்னும் அதிக கவனம் செலுத்த விரும்புகிறோம். இதற்காக மைதானத்தின் விளக்கு கீழே கேட்ச்சை தவற விடாமல் பிடிப்பது எப்படி என்ற பயிற்சியும் அவர்களுக்கு அளித்து வருகிறோம். இந்த முறை டெல்லி அணி அனுபவம் மற்றும் இளம் துடிப்புடன் கூடிய வீரர்கள் கலந்த கலவையாக உள்ளது. ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் அஜிங்கிய ரஹானே உள்ளிட்ட வீரர்களிடம் இந்த முறை இது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. இது நிச்சயமாக டெல்லி அணி வீரர்களுக்கு நல்ல பலன் கொடுக்கும் என எதிர்பார்க்கின்றேன்” என்றார்.

Views: - 2

0

0