6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அசத்தல் வெற்றி!! இறுதி போட்டியில் மீண்டும் சென்னையுடன் மோதுகிறது

Author: Udhayakumar Raman
13 October 2021, 11:46 pm
Quick Share

ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்ற இரண்டாவது தகுதி சுற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், லீக் போட்டிகள் முடிந்து தற்போது ‘பிளே-ஆப்’ சுற்று நடந்து வருகிறது. இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் முன்னாள் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்சை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இதையடுத்து நடந்த வெளியேற்றுதல் சுற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை விரட்டியடித்தது.இந்த நிலையில் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் 2-வது அணி எது? என்பதை நிர்ணயிக்கும் இரண்டாவது தகுதி சுற்றில் டெல்லி கேப்பிட்டல்சும், கொல்கத்தா நைட் ரைடர்சும் ஷார்ஜாவில் பலப்பரிட்சை நடத்தினர். டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங்கை துவக்கிய டெல்லி அணி, கொல்கத்தா அணியின் கட்டுக்கோப்பான பந்து வீச்சால் ரன்களை குவிக்க தடுமாறியது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் சேர்த்தது.

பின்னர் 136 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்களான ஷுப்மான் கில், வெங்கடேஷ் அய்யர் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 12.2 ஓவரில் 96 ரன்கள் குவித்தது. அரைசதம் அடித்த வெங்கடேஷ் அய்யர் 41 பந்தில் 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் முன்னணி பந்து வீச்சாளர்களால் இவர்களுக்கு நெருக்கடி அளிக்க முடியவில்லை.அடுத்து ஷுப்மான் கில் உடன் நிதிஷ் ராணா ஜோடி சேர்ந்தார். அணியின் ஸ்கோர் 16 ஓவரில் 123 ரன்னாக இருக்கும்போது நிதிஷ் ராணா 12 பந்தில் 13 ரன்கள் எடுத்து வெளியேறினார். அப்போது கொல்கத்தா அணிக்கு 4 ஓவரில் 13 ரன்களே தேவைப்பட்டது. ஷுப்மான் கில் 46 பந்தில 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கடைசி இரண்டு ஓவரில் 10 ரன்கள் தேவைப்பட்டது.

19-வது ஓவரை அன்ரிச் நோர்ஜோ வீசினார். இந்த ஓவரில் 3 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார் நோர்ஜே. இதனால் கடைசில் ஓவரில் 7 ரன்கள் தேவைப்பட்டது. அஷ்வின் கடைசி ஓவரை வீசினார். முதல் பந்தில் திரிபாதி ஒரு ரன் அடித்தார. 2-வது பந்தில் ரன் எடுக்கவில்லை. 3-வது பந்தில் ஷாகிப் அல் ஹசன் ஆட்டமிழந்தார். 4-வது பந்தில் சுனில் நரைன் ஆட்டமிழந்தார். இதனால் கடைசி 2 பந்தில் 6 ரன்கள் தேவைப்பட்டது. 5-வது பந்தை திரிபாதி சிக்சருக்கு தூக்கினார். இதனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 19.5 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் எடுத்து டெல்லியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

Views: - 171

0

0