ராஜஸ்தான் அணியை பந்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:86 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி…!!!

Author: kavin kumar
7 October 2021, 11:28 pm
Quick Share

ஐபிஎல் 2021 போட்டித்தொடரின் 54வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, 86 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

ஐ.பி.எல். கிரிக்கெட்டின் 54-வது லீக் ஆட்டம் சார்ஜாவில் இன்று நடைபெற்றது. அதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மோதியது. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி கொல்கத்தா அணியின் சார்பில் சுப்மன் கில் மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். நல்ல தொடக்கத்தை தந்த இந்த ஜோடி, பவர் பிளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 34 ரன்கள் எடுத்தது. இதன்பிறகு, கொல்கத்தா பேட்டிங்கில் படிப்படியாக அதிரடி வெளிப்பட்டது. முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 79 ரன்கள் சேர்த்த நிலையில், வெங்கடேஷ் ஐயர் 38 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய நிதிஷ் ராணா வந்த வேகத்தில் சிக்ஸரும், பவுண்டரியும் அடித்து 5 பந்துகளில் 12 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இதையடுத்து, சுப்மன் கில்லும், ராகுல் திரிபாதியும் ரன் ரேட்டை உயர்த்தினர். சுப்மன் கில் 40-வது பந்தில் அரைசதத்தை எட்டியநிலையில், 56 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கடைசி நேரத்தில் திரிபாதியும் 21 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது.இதையடுத்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது. தொடக்கத்தில் இருந்தே கொல்கத்தா வீரர்கள் சிறப்பாக பந்து வீசினர். இதனால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன. அந்த அணியில் ராகுல் டெவாடியா மட்டும் தாக்குப்பிடித்து 44 ரன்னில் வெளியேறினார்.ராஜஸ்தான் ராயல்ஸ் 85 ரன்னில் ஆல் அவுட்டானது. இதனால் 86 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற கொல்கத்தா பிளே ஆப் வாய்ப்பை தக்கவைத்தது.

Views: - 565

0

0