ஸ்பெயின் பத்திரிக்கைக்கு எதிராக சட்ட நடவடிக்கை: பார்சிலோனா நிர்வாகம் முடிவு!

31 January 2021, 7:32 pm
Quick Share

நட்சத்திர கால்பந்து வீரரான மெஸ்சியின் ஒப்பந்தம் குறித்து செய்தி வெளியிட்ட ஸ்பெயின் பத்திரிக்கைக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பார்சிலோனா அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

கடந்த 2017 -2021 ஆண்டில் பார்சிலோனா அணியின் நட்சத்திர கால்பந்து வீரரான லயோனல் மெஸ்சி, அந்த அணியுடனான ஒப்பந்தம் மூலம் பல ஆயிரம் கோடிகளை சம்பாதித்துள்ளதாக ஸ்பெயின் நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. பார்சிலோனா அணியின் கேப்டனான லயோனல் மெஸ்சி. சர்வதேச அரங்கில் சிறந்த கால்பந்து வீரராக திகழ்ந்து வரும் இவர், கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் பார்சிலோனா உடனான ஒப்பந்தம், சம்பலம் மற்றும் ஒப்பந்த புதுப்பித்தல் என பல கோடிகளை வருமானமாக ஈட்டியுள்ளார் என ஸ்பெயின் செய்தித்தாளான எல் முண்டோ அம்பலப்படுத்தியுள்ளது. இவரின் இந்த வருமானம் விளையாட்டு வீரர் ஒருவர் ஈட்டிய வரலாறு காணதாக தொகை என்றும் அதில் குறிப்பிட்டுள்ளது.

அந்த செய்தியில் குறிப்பிட்டது போல பார்சிலோனா அணிக்காக கடந்த 5 சீசன்களில் பங்கேற்க மெஸ்சி மொத்தமாக 55.5237 கோடி யூரோக்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்திய ரூபாய் மதிப்பில் இந்த தொகை கிட்டத்தட்ட ரூ. 4920 கோடிகளாகும். பார்சிலோனா அணியுடனான மெஸ்சியின் ஒப்பந்தம் இன்னும் ஐந்து மாதங்கள் உள்ளது. இதுவரை மெஸ்சி 51.1540 கோடி யூரோக்களை பெற்றுள்ளார்.

இந்த தொகையில் ஒரு சீசனுக்கு மெஸ்சிக்கு இதர வரவு உட்பட 13.80 கோடி யூரோக்களும், ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட போனஸாக 11.5225 கோடி யூரோக்களும், ஒப்பந்த புதுப்பித்தலுக்காக 7.7929 கோடி யூரோக்களும் வழங்கப்பட்டுள்ளது. மெஸ்சி தற்போது பார்சிலோனா அணியில் இருந்து விலகவுள்ள நிலையில் இந்த தகவல்கள் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த செய்தியை வெளியிட்ட பத்திரிக்கைக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பார்சிலோனா அணி நிர்வாகம் சார்பில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பார்சிலோனா அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பார்சிலோனா அணி லயோனல் மெஸ்சிக்கு முழு ஆதரவு அளிக்கிறது, குறிப்பாக அவரின் இமேஜை கொடுக்கும் வகையில் உள்ள தகவல்களுக்கு எதிராக. உலகின் மிகச்சிறந்த வீரராக அவர் உருவாக காரணமாக இருந்த அணியுடன் அவருக்கு உள்ள உறவை கெடுக்கும் விதமாகவும் இது அமைந்துள்ளது” என அதில் குறிப்பிட்டுள்ளது.

கடந்த 2000ஆம் ஆண்டு மெஸ்சி, தனது 13 வயது முதல் பார்சிலோனா அணியில் உள்ளார். தொடர்ந்து 2004 இல் அறிமுகமான மெஸ்சி இதுவரை பார்சிலோனா அணிக்காக 650 கோல்கள் அடித்துள்ளார். மேலும் 280 கோல்கள் அடிக்க உதவியாகவும் இருந்துள்ளார் மெஸ்சி. மேலும் 10 லா லிகா பட்டங்கள், 4 சாம்பியன்ஸ் லீக் கோப்பைகள், 6 கோபா டெல் ரே கோப்பைகள் வெல்லவும் காரணமாக இருந்துள்ளார்.

Views: - 17

0

0