லார்ட்ஸ் டெஸ்ட் கிரிக்கெட்… இந்தியா 364 ரன்கள் குவிப்பு : இங்கிலாந்து அணி நிதான தொடக்கம்..!!!
Author: Babu Lakshmanan13 August 2021, 8:16 pm
இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட்டின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 364 ரன்களை குவித்துள்ளது.
5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. முதல் டெஸ்ட் சமனில் முடிந்த நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் கிரிக்கெட் லார்ட்சில் நேற்று தொடங்கியது. இதில், முதலில் பேட் செய்த இந்திய அணிக்கு ரோகித் சர்மா – கேஎல் ராகுல் ஜோடி சிறப்பான தொடக்கத்தை கொடுத்தது. இருவரும் சேர்த்து 126 ரன்கள் சேர்த்த நிலையில், சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரோகித் சர்மா போல்டானார். இதைத் தொடர்ந்து, களமிறங்கிய புஜாரா (9), கோலி (42) ஆட்டமிழந்தனர். இதனால், முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 276 ரன்கள் எடுத்திருந்தது.
இதைத் தொடர்ந்து, 2வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியதும், ரகானே (1) வந்த உடனே விக்கெட்டை இழந்து ஏமாற்றம் அளித்தார். மறுமுனையில் சிறப்பாக ஆடிய கேஎல் ராகுல் சதம் அடித்து அசத்தினார். 129 ரன்கள் இருந்த போது அவரும் தனது ஆட்டத்தை முடித்துக் கொண்டார். இதைத் தொடர்ந்து, பண்ட் – ஜடேஜா இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பின்னர், 37 ரன்கள் எடுத்திருந்த போது பண்ட் ஆட்டமிழந்தார். பின்னர், வந்த ஷமி சந்தித்த 2வது பந்திலேயே பெவிலியன் திரும்பினார்.
மதிய உணவு இடைவேளை வரை இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 346 ரன்கள் சேர்த்திருந்தது. இதைத் தொடர்ந்து பின்கள வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்ததால் இந்திய அணி 364 ரன்களுக்கு சுருண்டது. இங்கிலாந்து அணி தரப்பில் ஆண்டர்சன் 5 விக்கெட்டுக்களையும், ராபின்சன், வுட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும், மொயின் அலி ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இதைத்தொடர்ந்து, களமிறங்கிய இங்கிலாந்து அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
0
0