லார்ட்ஸ் டெஸ்ட் கிரிக்கெட் : ரூட்டின் வேற லெவல் ஆட்டம்… இந்திய அணியை கடந்து முன்னேறப் போகும் இங்கிலாந்து..!!

Author: Babu Lakshmanan
14 August 2021, 8:32 pm
root - updatenews360
Quick Share

இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட்டின் முதல் இன்னிங்சில் கேப்டன் ரூட்டின் அபார சதத்தினால் இங்கிலாந்து அணி மளமளவென ரன்களை குவித்து வருகிறது.

5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. முதல் டெஸ்ட் சமனில் முடிந்த நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் கிரிக்கெட் லார்ட்சில் நேற்றுமுன்தினம் தொடங்கியது. இந்திய அணியின் தொடக்க வீரர்கள் சிறப்பான தொடக்கம் கொடுத்ததனால், முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 276 ரன்கள் எடுத்திருந்தது.

KL rahul -- updatenews360

இதைத் தொடர்ந்து, 2வது நாளில் இந்திய அணி மளமளவென விக்கெட்டுக்களை இழந்தது. சிறப்பாக ஆடிய கேஎல் ராகுல் சதம் அடித்து அசத்தினார். 129 ரன்கள் இருந்த போது அவரும் தனது ஆட்டத்தை முடித்துக் கொண்டார். இதைத் தொடர்ந்து, மற்ற வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்ததால், இந்திய அணி 364 ரன்களுக்கு சுருண்டது. இங்கிலாந்து அணி தரப்பில் ஆண்டர்சன் 5 விக்கெட்டுக்களையும், ராபின்சன், வுட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும், மொயின் அலி ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இதைத்தொடர்ந்து, களமிறங்கிய இங்கிலாந்து அணி 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் எடுத்திருந்தது.

இந்த நிலையில், 3வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியதில் இருந்து இங்கிலாந்து அணி வீரர்கள் சிறப்பாக ஆடி வருகின்றனர். கேப்டன் ரூட் தனது சதத்தை நிறைவு செய்து விளையாடி வருகிறார். பேர்ஸ்டோவ் 57 ரன்னில் ஆட்டமிழந்தார்.

தற்போது தேநீர் இடைவெளி வரையில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 314 ரன்கள் சேர்த்துள்ளது. ரூட் 132 ரன்னுடனும், மொயின் அலி 20 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

Views: - 546

0

0