“பக்கதுல இருந்து பாத்திருக்கேன்… தல தோனி மிக எளிமையானவர்” – நட்பின் நினைவுகளை பகிர்ந்த காவல் அதிகாரி..!

17 August 2020, 4:31 pm
Quick Share

சென்னையில் அக்கெடமி ஆரம்பித்து கிரிக்கெட்டில் இளைஞர்களை உருவாக்கி எடுக்க வேண்டும் என்பது தோனியின் ஆசை.

இந்திய கிரிக்கெட் அணியின் தலை சிறந்த நாயகனாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் மகேந்திர சிங் தோனி. இந்த பெயரை சொல்லும் போதே ஏதோ ஒரு உணர்வு பூர்வமான உத்வேகம் உள்ளுக்குள் தானாக எழும்.

கிரிட்கெட் விளையாட்டில் கால் பதித்த நாள் முதல் இந்திய மக்களின் உணர்வுகளை மனதில் சுமந்துகொண்டு களத்தில் வேட்டையாடும் தோனி, மெடிக்கல் மிராக்கல் என வாய் அடைத்து, மெய் சிலிர்த்து பார்க்கும் அளவுக்கு கடைசி நொடியில் இந்திய அணியை வெற்றி பெற செய்யும் வித்தகன்.

தனது திறமையாலும், கடின உழைப்பாலும் கிரிக்கெட் மீது கொண்ட காதலாலும் இத்தனை ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய அவரை பார்த்தால் எதிர் அணியின் வேக பந்து வீச்சாளரும் “என்னடா இவன் எப்படி போட்டாலும் அடிக்குறானே” என நினைக்கும் அளவுக்கு தோனியின் ஆட்டம் அனல் பறக்கும்.

மட்டும் இன்றி தன்னுடன் ஆடும் சக வீரர்களுக்கு ஆட்டத்தின்போது ஒரு கேப்டனாக முன்னிற்று கேள்வி எழுப்பும் தோனி நட்புக்கு முக்கியத்துவம் வளங்குபவர். இப்படி தனது சிறந்த குணாதிசயங்களால் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இது நாடெங்கும் உள்ள அவரது ரசிகர்களுக்கு பெரும் சோகமாக அமைந்துள்ளது. இரண்டு நாட்களாக தோனியின் முகம் சமூக வலைதளங்களையே ஆட்கொண்டுள்ளது என்றால் இதுவே ரசிகர்கள் அவர் மீது வைத்திருக்கும் அன்பிற்கு சாட்சி.

இந்தநிலையில், அவர் குறித்து நமக்கு தெரியாத சில விஷயங்களை சென்னையில் வசித்து வரும் வேலூரை சேர்ந்த ஓய்வு பெற்ற காவல் அதிகாரி கே.என் முரளி தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அவர் கூறுகையில், கடந்த 2004ஆம் ஆண்டு முதல் 2005ஆம் ஆண்டு வரை இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தில் பாதுகாப்பு பிரிவில் பணியாற்றி வந்தேன். அப்போது இந்திய அணி அங்கு விளையாட வந்தது. அப்போது வீரர்களை பாதுகாக்கும் பணி எனக்கு வழங்கப்பட்டிருந்ததால் அவருடன் நெருங்கி நட்பு கிடைத்தது. 25 நாட்கள் நான் தோனி உடனேயே இருந்தேன்.

இலங்கையுடன் நடந்த அந்த போட்டியின் ஒரு நாளில் தோனிக்கு விளையாட இடம் கிடைக்கவில்லை. ஆனால் அது பற்றி அவர் சற்றும் கவலை படாமல் மிகவும் கூலாக, ஜாலியாக இருந்தார். இது மட்டும் இன்றி ஆட்டத்தில் இருந்து தன்னை ஒதுக்கி விட்டது குறித்து வருந்தாமல் களத்தில் விளையாடிக்கொண்டு இருந்த வீரர்களுக்கு குளிர்பானங்களை கொண்டு சென்று கொடுத்தார். அப்போது அவரின் எளிமையை பார்த்து நான் வியந்துபோனேன்.

அன்று அவரிடம் நான் சொன்னேன் “தோனி சார் நீங்க கண்டிப்பா இந்திய அணியோட கேப்டனா வருவீங்க” என்று. அதேபோல் அவர் இந்திய அணியில் கேப்டனாகவும் ஆனார். அதன் பின் சென்னை சேப்பாக்கத்திற்கு விளையாட வந்த அவர் என்னை பார்த்தவுடன் கட்டி அணைத்து “முரளி சார் நான் கேப்டன் ஆயிட்டேன்” என கூறி மகிழ்ந்தார்.

அன்றில் இருந்து இன்றுவரை எங்கள் நட்பு தொடர்கிறது என கூறும் காவல் அதிகாரி, சென்னையில் அக்கெடமி ஆரம்பித்து கிரிக்கெட்டில் இளைஞர்களை உருவாக்கி எடுக்க வேண்டும் என்பது தனது ஆசை என கூறியதாவும், சென்னை மக்கள் மிகவும் உண்மையானவர்கள் எனவும் தொனி அடிக்கடி கூறுவார் எனவும் நெகிழ்த்தார். தோனி வரும் தலைமுறைக்காகவே வழி விட்டிருப்பதாக தெரிவித்த காவலர் முரளி அவர் மீது அன்பு கொண்டுள்ள ரசிகர்களில் நானும் ஒருவன் எனக்கூறி முடித்தார்.

Views: - 10

0

0