டான் ரோஹித் சர்மாவின் சிக்சர் சாதனையை உடைத்தெறிந்த கப்டில்!

25 February 2021, 5:16 pm
Guptill - Updatenews360
Quick Share

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டியில் நியூசிலாந்து வீரர் மார்டின் கப்டில் இந்திய வீரர் ரோஹித் சர்மாவின் சாதனையைத் தகர்த்தார்.

நியூசிலாந்து சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் பங்கேற்கிறது. கிறிஸ்ட்சர்ச்சில் நடந்த முதல் டி-20 போட்டியில் நியூசிலாந்து அணி வென்றது. இரு அணிகள் மோதிய இரண்டாவது போட்டி டுனேடனில் இன்று நடந்தது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பீல்டிங் தேர்வு செய்தது.

இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணிக்குத் துவக்க வீரர் மார்டின் கப்டில் (97), கேப்டன் கேன் வில்லியம்சன் (53), நீசம் (45*) ஆகியோர் கைகொடுக்க நியூசிலாந்து அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 219 ரன்கள் குவித்தது. கடினமான இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணிக்கு ஜாஸ் பிலிப் (45), மார்கஸ் ஸ்டோனிஸ் (78), டேனியல் சாம்ஸ் (41) ஆகியோர் கைகொடுக்க ஆஸ்திரேலிய அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 215 ரன்கள் எடுத்து 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்நிலையில் இந்த போட்டியில் 97 ரன்கள் விளாசிய நியூசிலாந்து வீரரான மார்டின் கப்டில் 6 பவுண்டரிகளும், 8 சிக்சர்களும் அடித்து அசத்தினார். இதன்மூலம் சர்வதேச டி-20 கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் இந்திய துவக்க வீரர் ரோஹித் சர்மாவை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்தார் கப்டில். தற்போது டி -20 கிரிக்கெட்டில் 132 சிக்சர்கள் அடித்துள்ளார் கப்டில். ரோஹித் சர்மா 108 போட்டிகளில் 127 சிக்சர்கள் அடித்துள்ளார்.

இவர்களைத் தொடர்ந்து இங்கிலாந்து அணி கேப்டன் இயான் மார்கன் (113 சிக்சர்கள்), நியூசிலாந்தின் கோலின் முன்ரோ (107), வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெயில் (105) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

Views: - 26

1

1