பாராலிம்பிக்கில் பதக்க வேட்டை : தேசிய விளையாட்டு தினமான இன்று ஒரே நாளில் 3 பதக்கங்கள் வென்ற இந்தியா!!
Author: Udayachandran RadhaKrishnan29 August 2021, 8:03 pm
டோக்கியோ பாராலிம்பிக் ஆண்கள் வட்டு எறிதலில் இந்திய வீரர் வினோத் குமார் வெண்கலம் வென்று சாதனைப் புரிந்துள்ளார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பாராலிம்பிக் போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அதன்படி,இன்று நடைபெற்ற டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு போட்டியில் இந்திய வீராங்கனை பவினா பென் படேல் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
அவரை தொடர்ந்து,டோக்கியோவில் இன்று மாலை நடைபெற்ற பாராலிம்பிக் உயரம் தாண்டுதல் டி 47 இறுதிப் போட்டியில் இந்திய வீரர் நிஷாத் குமார் 2.06 மீ தாண்டி வெள்ளி வென்று சாதனைப் புரிந்துள்ளார்.இது பாராலிம்பிக்கில் இந்தியா பெற்ற இரண்டாவது பதக்கம் ஆகும். மேலும்,இவர் ஆசிய சாதனையை படைத்தார்.
இந்நிலையில்,இன்று நடைபெற்ற ஆண்களுக்கான எஃப் -52 வட்டு எறிதல் போட்டியில் இந்தியா வீரர் வினோத் குமார் பங்கேற்று,முதல் முயற்சியில் 17.46 மீட்டர் தூரம் வீசினார்.அதன்பின்னர் இரண்டாவது முயற்சியில் 18.32 மீட்டர் தூரமும், மூன்றாவது முயற்சியில் 17.80 மீட்டர் தூரமும் வீசினார்.
இதனைத் தொடர்ந்து,நான்காவது முயற்சியில் 19.12 மீட்டர் தூரமும், ஐந்தாவது முயற்சியில் அதிகபட்சமாக 19.91 மீட்டர் தூரம் வீசி புதிய ஆசிய சாதனை படைத்தார். தன்னுடைய ஆறாவது வாய்ப்பில் அவர் 19.81 மீட்டர் தூரம் வீசினார்.எனினும்,தன்னுடைய அதிகபட்சமான 19.91 மீட்டர் தூரத்துடன் இந்திய வீரர் வினோத் குமார் 3 ஆவது இடத்தை பிடித்து,வெண்கலப்பதக்கத்தை பெற்றுள்ளார். இதன்மூலம்,இந்தியா தனது பதக்கப்பட்டியலில் இன்று ஒரே நாளில் 3 பதக்கத்தை பெற்றுள்ளது.
0
0