சிஎஸ்கே பயிற்சி முகாமில் இணைந்த ‘தல’ தோனி, அம்பதி ராயுடு!

4 March 2021, 10:14 am
Quick Share

இந்தாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான பயிற்சிக்காகச் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி முகாமில் கேப்டன் தோனி மற்றும் அம்பதி ராயுடு ஆகியோர் இணைந்துள்ளனர்.

இந்தியாவில் இந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரை நடத்த பிசிசிஐ தனது தூக்கத்தை இழந்து வருகிறது எனலாம். சமீப காலமாக இந்தியாவில் மீண்டும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிக அளவில் உள்ளது. இதனால் ஆறு குறிப்பிட்ட நகரங்களில் மட்டும் இந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை நடத்த பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான பயிற்சிகளை வரும் மார்ச் 8 அல்லது 9ஆம் தேதி முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி துவங்க இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்த பயிற்சியில் முதல் நாளிலிருந்து கேப்டன் தோனி பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி முகாமில் கேப்டன் தோனி மற்றும் அம்பதி ராயுடு ஆகியோர் இணைந்துள்ளனர். இவர்களைத் தொடர்ந்து மற்ற தமிழக வீரர்களும் இந்த பயிற்சி முகாமில் இணைய உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் கூறுகையில், “எங்கள் அணியின் பயிற்சி முகாமை வரும் 8 அல்லது 9ம் தேதி முதல் துவங்கத் திட்டமிட்டுள்ளோம். இதற்காக கேப்டன் தோனி மற்றும் அம்பதி ராயுடு ஆகியோரும் இந்த பயிற்சியில் கலந்து கொள்கின்றனர். விரைவில் தமிழக வீரர்களும் இதில் இணையவுள்ளனர்” என்றார்.

கடந்த பிப்ரவரி 18ம் தேதி சென்னையில் நடந்த ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் மொயின் அலி, கௌதம், புஜாரா உள்ளிட்ட வீரர்களைச் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் ஏலத்தில் எடுத்தது.

சிஎஸ்கே அணி வீரர்கள் தோனி (கே), சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, ஜகதீசன், ஃபாப் டூபிளசிஸ், ருதுராஜ் கெய்க்வட், புஜாரா, டுவைன் பிராவோ, ரவிந்திர ஜடேஜா, சாம் கரண், மிட்சல் சாண்ட்னர், ஜாஸ் ஹசில்வுட், சார்துல் தாகூர், கரன் சர்மா, அசிப், இம்ரான் தாஹிர், சாய் கிஷோர், தீபக் சஹார், லுங்கி நிகிடி, மொயின் அலி.

Views: - 10

0

0