தோனியின் ஓய்வுக்கு மோடி ரியாக்ஷன்..! ட்விட்டரில் பகிர்ந்த கூல் கேப்டன்..!

20 August 2020, 3:00 pm
dhoni_modi_updatenews360
Quick Share

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஆகஸ்ட் 15’ம் தேதி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்ததையடுத்து, தோனியின் சேவையை பாராட்டி பிரதமர் நரேந்திர மோடி அனுப்பிய கடிதத்தை, தற்போது சமூக ஊடகங்களில் தோனி பகிர்ந்துள்ளார்.

இது தொடர்பாக தோனி தனது ட்விட்டர் பக்கத்தில், “ஒரு கலைஞர், சிப்பாய் மற்றும் விளையாட்டு வீரர் என அனைவரும் விரும்புவது பாராட்டுகளைத்தான். அவர்களின் கடின உழைப்பு மற்றும் தியாகம் அனைவராலும் கவனிக்கப்படுவது பாராட்டுக்கள் மூலமே ஆகும். உங்கள் பாராட்டுக்கும் நல்வாழ்த்துக்களுக்கும் பிரதமர் நரேந்திரமோடிக்கு நன்றி.” எனக் கூறி, மோடியின் பாராட்டுக் கடிதத்தைப் பகிர்ந்துள்ளார்.

அந்த கடிதத்தில், மகேந்திர சிங் தோனியின் பெயர் வரலாற்றில் “உலகின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர்” என்றும் “சிறந்த கிரிக்கெட் கேப்டன்களில் ஒருவர்” என்றும் இடம் பெரும் என பிரதமர் மோடி எழுதியுள்ளார்.

தோனி கிரிக்கெட்டில் அவர் செய்த சாதனைகளுக்கு மட்டுமல்லாமல், எந்த பின்புலமும் இல்லாமல் தொடங்கி பின்னர் அவர் பெற்ற மகத்தான வெற்றிக்காகவும் நினைவுகூரப்படுவார் என்று அவர் மேலும் எழுதினார்.

பிரதமர், 2007 உலக டி-20 வெற்றியை இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்று குறிப்பிட்டார். மேலும் தோனி புதிய இந்தியாவின் முகத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறார் என்றும், ஆபத்தான முயற்சிகளை எடுக்க தயங்குவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரதமர் மோடி, தோனியின் எதிர்கால முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெற அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

தோனி தனது ஓய்வை, சர்வதேச கிரிக்கெட்டில் நுழைந்து பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு ஆகஸ்ட் 15’ல் அறிவித்தார். அவர் 350 ஒருநாள், 90 டெஸ்ட் மற்றும் 98 டி-20 போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும் இந்திய அணியை வழிநடத்தி நான்கு ஐ.சி.சி கோப்பைகளையும் வென்று கொடுத்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும், இந்தியன் பிரீமியர் லீக்கின் 13’வது சீசனின் போது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தொடர்ந்து வழிநடத்துகிறார்.

Views: - 42

0

0