திடீரென தலைகீழாக்கிய பவுலர்கள்… மும்பை முதல் வெற்றி: கொல்கத்தா சொதப்பல் தோல்வி!

13 April 2021, 11:27 pm
Quick Share

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஐந்தாவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இந்தியாவில் 14வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. சென்னையில் நடக்கும் 5வது லீக் போட்டியில் 5 முறை சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியை, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி எதிர்கொண்டது. டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பீல்டிங் தேர்வு செய்தது. கொல்கத்தா அணி எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. மும்பை இந்தியன்ஸ் அணியில் கிறிஸ் லின் நீக்கப்பட்டு குயிண்டன் டி காக் சேர்க்கப்பட்டார்.

சூர்யா ஆறுதல்
முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா (43) மற்றும் சூர்யகுமார் யாதவ் (56) தவிர்த்து குர்னால் (15), ஹர்திக் (15) இருவர் மட்டுமே இரட்டை இலக்க ரன்களை எட்டினர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் அவுட்டாக மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 152 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

நல்ல அடித்தளம்
எட்டக்கூடிய இலக்கை துரத்திய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு சுப்மான் கில் (33), நிதிஷ் ரானா (57) ஆகியோர் நல்ல அடித்தளம் அமைத்தனர். இதன் பிறகு வந்த ராகுல் திருப்பதி (5), கேப்டன் இயான் மார்கன் (7) ஆகியோர் அடுத்தடுத்து ராகுல் சஹார் சுழலில் அவுட்டாகினர். தொடர்ந்து வந்த ஷாகிப் அல் ஹாசனை (9) குர்னால் பாண்டியா வெளியேற்றினார்.

தலைகீழான முடிவு
இதன் பின் வந்த தினேஷ் கார்த்திக், ஆண்ரே ரசல் ஆகியோர் ரன்கள் சேர்க்க தட்டுத்தடுமாறினர். இதையடுத்து கொல்கத்தா அணியின் வெற்றிக்கு 2 ஓவரில் 19 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. இந்த ஓவரில் வெறும் 4 ரன்கள் மட்டும் எடுக்கப்பட கடைசி ஓவரில் கொல்கத்தா அணியின் வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்டது. பவுல்ட் வீசிய இந்த ஓவரில் ரசல் (9), பாட் கம்மின்ஸ் (0) அவுட்டாகினர். இதையடுத்து கொல்கத்தா அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 142 ரன்கள் மட்டும் எடுத்து 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

சுழற்பந்துவீச்சுக்கு சாதகம்
சென்னை சேப்பாக்க மைதானத்தின் ஆடுகளம் எப்போதும் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமானது என அனைவருக்கும் தெரியும். இன்றைய ஆட்டத்தில் முதல் இன்னிங்சில் கடைசி ஓவர்களில் வேகப்பந்துவீச்சாளரான ஆண்ரே ரசலுக்கு கைகொடுத்த ஆடுகளம், இடையில் கொல்கத்தா அணி பேட்டிங் செய்ய களமிறங்கிய போது முழுவதுமாக சுழற்பந்து வீச்சுக்கு சாதகமானது. இதனால் மும்பை அணி டெஸ்ட் போட்டிக்கு பீல்டிங் செட் செய்வது போன்ற அமைப்பை பயன்படுத்தியையும் காண முடிந்தது.

Views: - 81

0

0