தரமான சம்பவம் செய்தால் மும்பை அணிக்கு பிளே ஆஃப் வாய்ப்பு… பரபரப்பான கட்டத்தில் ஐதராபாத்துடன் இன்று மோதல்!!!
Author: Babu Lakshmanan8 October 2021, 9:52 am
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தாவை பின்னுக்குத் தள்ளி பிளே ஆஃப்பிற்கு செல்ல மும்பை அணி இன்றைய லீக் ஆட்டத்தில் சில கட்டாய நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் டெல்லி, சென்னை, பெங்களூரூ அணிகள் முதல் 3 இடங்களை பிடித்து பிளே ஆஃப்பிற்கு முன்னேறி விட்டன. எஞ்சிய ஒரு இடத்திற்கு கொல்கத்தா, ராஜஸ்தான், மும்பை அணிகள் கடுமையாக போராடி வருகின்றன.
நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ராஜஸ்தானை 86 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த கொல்கத்தா அணி, கிட்டத்தட்ட பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்து விட்டது. அந்த அணி 7 வெற்றிகளுடன், +0,587 என்ற நெட் ரன்ரேட் வைத்துள்ளது. இந்த ரன்ரேட் ஏற்கனவே பிளே ஆஃப்பிற்கு தகுதி பெற்றுள்ள அணிகளை விட கூடுதலானதாகும்.
இப்படியிருக்கையில், இன்று நடக்கும் லீக் ஆட்டத்தில் மும்பை – ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றாலும் மும்பை அணிக்கு பிளே ஆஃப் வாய்ப்பு சற்று கடினமானதுதான். காரணம், தற்போது அந்த அணியின் ரன்ரேட் – 0.048 ஆக உள்ளது.
கொல்கத்தாவை ரன்ரேட்டில் முந்தினால் மட்டுமே மும்பை அணி பிளே ஆஃப் வாய்ப்பை பற்றி நினைத்து பார்க்க முடியும். ஆனால், அது அவ்வளவு சுலபமல்ல. ஐபிஎல்லில் சாதனை வெற்றியை பதிவு செய்தால் மட்டுமே மும்பை அணியால் அதனை சாத்தியப்படுத்த முடியும்.
அதாவது, ஐதராபாத்திற்கு எதிரான இப்போட்டியில், முதலில் பேட்டிங் செய்து 200 ரன்களுக்கு அதிகமாக குவிக்க வேண்டும். அதுமட்டும் போதாது. ஐதராபாத் அணியை குறைந்தது 171 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டும்.இப்படி செய்தால் மட்டுமே ரன்ரேட் அடிப்படையில் மும்பை அணி 4-வது இடத்திற்கு சென்று பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும்.
ஐதராபாத் அணியை 171 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்துவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது என்பதால், நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை அணி பிளே-ஆப் சுற்றுக்குள் செல்வது கானல்நீர் போன்றதாகவே இருக்கிறது. யாருக்கு தெரியும், மும்பை அணியின் பேட்டிங் லைன்அப்பை நினைத்தால் என்னவேண்டுமானாலும் நடக்கலாம்.
0
0