எங்களைப் பெற்றோராகத் தேர்வு செய்ததற்கு நன்றி லட்டு: மகளின் புகைப்படத்தை வெளியிட்ட நடராஜன்!

22 February 2021, 10:08 pm
Quick Share

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான நடராஜன் தனது மகளின் புகைப்படத்தை முதல்முறையாக சமூக வளைத்தளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளராக நடராஜன் பங்கேற்க உள்ளார். இந்த தொடர் வரும் மார்ச் 1ஆம் தேதி துவங்குகிறது. இதற்கிடையில் அடுத்த வாரம் இந்திய அணியுடன் அகமதாபாத் சென்று இணைய உள்ளார் நடராஜன். இதற்கு முன்பாக தற்போது ஆஸ்திரேலிய தொடருக்குப் பின் கிடைத்த ஓய்வில் தனது மனைவி மற்றும் மகளுடன் சிறப்பாகப் பொழுதைக் கழித்து வருகிறார் நடராஜன்.

கடந்த 2020/21 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரின் போது மூன்று விதமான கிரிக்கெட்டிலும் அறிமுகமாகி அசத்தினார் நடராஜன். இவருக்குக் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பெண் குழந்தை பிறந்தது. ஆனால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் தொடர் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றிருந்த காரணத்தினால் ஐபிஎல் தொடர் முடிந்த உடனேயே நேரடியாகத் துபாயில் இருந்து நடராஜன் ஆஸ்திரேலியா செல்லும் நிலை ஏற்பட்டது. இதனால் இவர் தனது மகளை சுமார் இரண்டு மாத காலங்களாக நேரில் பார்க்க முடியவில்லை. ஆஸ்திரேலிய தொடருக்குப் பின் தமிழகம் திரும்பிய இவருக்கும் இவரது சொந்த ஊர் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தற்போது இந்த ஓய்வின் தனது குடும்பத்துடன் நேரம் செலவிட்டு வரும் நடராஜன் தனது மகளின் புகைப்படத்தை முதன்முறையாக சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இதுதொடர்பாக நடராஜன் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “எங்களது குட்டி தேவதை ஹன்விகா. நீ தான் எங்கள் வாழ்வின் மிகப்பெரிய பரிசு. எங்கள் வாழ்வு இவ்வளவு மகிழ்ச்சியாக இருப்பதற்கும் நீ தான் காரணம். நன்றி லட்டு எங்களைப் பெற்றோராகத் தேர்வு செய்ததற்கு. நாங்கள் எப்பொழுதும் உன் மீது அன்பு கொண்டவர்களாகவே இருப்போம்” என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் இடம் பெற்றிருந்த போதும் ஒரு போட்டியில் கூட நடராஜனுக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் கடந்த ஆண்டு 16 போட்டிகளில் பங்கேற்ற நடராஜன் தனது சிறப்பான பந்துவீச்சால் எதிரணி பேட்ஸ்மேன்களை திணறச் செய்தார். இவரின் சிறப்பான பந்துவீச்சு காரணமாக ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணியில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

முதலில் நெட்பவுலராக ஆக மட்டுமே இடம்பெற்றிருந்த நடராஜனுக்கு வருண் சக்கரவர்த்தியின் காயம் காரணமாகத் தேசிய அணியில் வாய்ப்பு இடம் பெறும் வாய்ப்பு கிடைத்தது. அதே போல ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அசத்த நடராஜனுக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் வாய்ப்பு தேடி வந்தது. இதையடுத்து ஒரே தொடரில் மூன்று விதமான கிரிக்கெட்டிலும் அறிமுகமான முதல் இந்திய வீரர் என்ற புதிய வரலாறு படைத்தார் நடராஜன். தற்போதுவரை நடராஜன் டெஸ்ட் கிரிக்கெட்டில் 3 விக்கெட்டுகளும், ஒருநாள் கிரிக்கெட்டில் 2 விக்கெட்டுகளும், டி20 கிரிக்கெட்டில் 6 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

Views: - 3

0

0