முதல் முறையாக ஐசிசி சாம்பியன் பட்டத்தை வென்றது நியூசிலாந்து : இந்தியர்களாலும் கொண்டாடப்படும் வெற்றி..!!

23 June 2021, 11:38 pm
nz 1- updatenews360
Quick Share

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு 139 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா.

சவுதாம்டனில் நடந்து வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 217 ரன்கள் எடுத்தது. மழை காரணமாக 2 நாட்கள் ஆட்டம் ரத்து செய்யப்பட்ட நிலையில், 5வது நாளான நேற்று நியூசிலாந்து அணி 249 ரன்கள் எடுத்தது. ஏற்கனவே, ரிசர்வ் டே இன்று ஒதுக்கப்பட்டிருந்ததால், மழையால் 2 நாட்களின் ஆட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு, 6வது நாளான இன்று விளையாட அனுமதிக்கப்பட்டது.

32 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணிக்கு, பேட்ஸ்மேன்கள் சொதப்பல் ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சீரான இடைவெளியில் விக்கெட்டுக்களை இந்திய அணி இழந்து தடுமாறியது. இறுதியில் 170 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. இதனால், நியூசிலாந்து அணிக்கு 139 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்து அணி தரப்பில் சவுதி 4 விக்கெட்டும், போல்ட் 3 விக்கெட்டும், ஜேமிசன் 2 விக்கெட்டும், வேக்னர் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

எளிய இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு தொடக்க வீரர்கள், கான்வே, லேதம் ஆகியோர் தொடக்கத்தில் விக்கெட்டை இழந்தனர். இதனால், இந்திய அணியின் பக்கம் ஆட்டம் திரும்பும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கேப்டன் வில்லியம்சன் மற்றும் அனுபவ ஆட்டக்காரர் டெய்லர் ஆகியோர் நிதானமாக ஆடி அணியை வெற்றி பெறச் செய்தனர். வில்லியம்சன் 52 ரன்களும், டெய்லா 47 ரன்களும் எடுத்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தனர்.

இதன்மூலம், முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் சாம்பியன் மகுடத்தை நியூசிலாந்து அணி முதன்முதலாக சூடியுள்ளது. அதுமட்டுமல்லாமல், ஐசிசி சாம்பியன் பட்டங்களில் நியூசிலாந்து அணி வெல்லும் முதல் பட்டமும் இதுவாகும்.

2 ஆண்டுகளுக்கு முன்பு ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணி தோல்வியை தழுவியது. தற்போது, நியூசிலாந்து அணி பெற்ற வெற்றியை இந்தியர்களும் கொண்டாடி வருகின்றனர்.

Views: - 393

0

0