கங்குலி, சேவாக், ரோகித் வரிசையில் இணைந்த ஸ்ரேயாஷ்… இனி கன்ஃபார்ம் : நியூசி., டெஸ்டில் இந்திய அணி அபாரம்..!!!

Author: Babu Lakshmanan
26 November 2021, 1:05 pm
Quick Share

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 345 ரன்கள் குவித்தது.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் முடிந்த கையோடு, நியூசிலாந்து அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான டி20 தொடரை இந்திய 3-0 என்ற கணக்கில் முழுவதுமாக கைப்பற்றி அசத்தியது.

இதையடுத்து, இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கான்பூரில் இன்று தொடங்கியது. இதில், டாஸ் வென்ற கேப்டன் ரகானே, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி, களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. மயாங்க் அகர்வால் (13) ஏமாற்றம் அளித்தாலும், கில் (52), புஜாரா (26), ரகானே (35) ஆகியோர் ஓரளவுக்கு ரன்களை குவித்தனர்.

இதைத் தொடர்ந்து, 5வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஸ்ரேயாஷ் ஐயர், ஜடேஜா நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர். இருவரும் அரைசதம் அடித்து அணியின் ஸ்கோரை வெகுவாக உயர்த்தினர். இதனால், இந்திய அணி முதல் நாள் ஆட்டம் நேர முடிவில், 4 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் சேர்த்தது. ஸ்ரேயாஷ் (75), ஜடேஜா (50) ரன்கள் எடுத்து களத்தில் இருந்தனர்.

shreyas - jadeja - updatenews360

இந்த நிலையில், இருவரும் 2வது நாள் ஆட்டத்தை தொடங்கிய நிலையில், ஜடேஜா விக்கெட்டை பறிகொடுத்தார். இருப்பினும், சிறப்பாக ஆடிய ஸ்ரேயாஷ் ஐயர், தனது அறிமுகப் போட்டியிலேயே முதல் சதத்தை பதிவு செய்தார். இதன்மூலம், அறிமுகப் போட்டியில் சதமடித்த 16வது இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். இதற்கு முன்னதாக, லாலா அமர்நாத், தீபக் ஷோடான், அர்ஜுன் கிரிபால் சிங், அப்பாஸ் அலி பெய்க், ஹனுமந்த் சிங், குண்டப்பா விஸ்வநாத், சுரேந்திர, மொகமது அசாருதீன், பிரவீன் ஆம்ரே, சவுரவ் கங்குலி, விரேந்திர சேவாக், சுரேஷ் ரெய்னா, ஷிகர் தவான், ரோகித் சர்மா, பிரிதிவி ஷா ஆகியோர் முதல் போட்டியில் சதம் விளாசியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, அஸ்வினை (38) தொடர்ந்து வந்த வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் 345 ரன்களுக்கு இந்திய அணி ஆட்டமிழந்தது. நியூசிலாந்து அணி தரப்பில் சவுதி 5 விக்கெட்டுக்களையும், ஜேமிசன் 3 விக்கெட்டுக்களையும், அஜிஸ் படேல் 2 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

தொடர்ந்து, நியூசிலாந்து அணிக்கு யங் மற்றும் லாதம் ஆகியோர் முதல் இன்னிங்சை தொடங்கி ஆடி வருகின்றனர்.

Views: - 920

0

0