நீண்ட காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்த கிரிக்கெட் கடவுள் சச்சின்: சதத்தில் சதத்தை எட்டிய தினம் இன்று!

Author: Udhayakumar Raman
16 March 2021, 8:39 am
Quick Share

சுமார் 9 ஆண்டுகளுக்கு முன் இதே தினத்தில் சச்சின் டெண்டுல்க சதத்தில் சதம் அடித்து வரலாறு படைத்த தினம் இன்று. இவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று 8 ஆண்டுகள் நிறைவடைந்த பின்னும் இந்த சாதனையை யாராலும் நெருங்கக்கூட முடியவில்லை.

சர்வதேச கிரிக்கெட்டில் சுமார் 23 ஆண்டுகளில் பல சாதனை படைத்துள்ள சச்சின் ஒரே ஒரு சாதனையை எட்ட மிக நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அது சர்வதேச அரங்கில் தனது 100-வது சதத்தைப் பூர்த்தி செய்வது தான். அவர் இதற்காக நீண்ட நாள் எடுத்துக் கொண்டார். தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராகத் தனது 99வது சதத்தைப் பூர்த்தி செய்தபின் சச்சின் 100வது சதத்தை அடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்ப்பு ஒவ்வொரு போட்டிகளில் தொடர்ந்த வண்ணம் இருந்தது.

முதல் வீரர்
தனது 99 சதத்தைப் பூர்த்தி செய்தபின் சச்சின் களமிறங்கிய ஒவ்வொரு போட்டியிலும் இந்த மைல்கல்லை எட்டிவிடுவார் எனப் பல நாட்கள் ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தனர். ஒரு வழியாகக் கடந்த 2012ஆம் ஆண்டு ஆசியக் கோப்பை தொடரில் வங்கதேச அணிக்கு எதிராகச் சதத்தைப் பூர்த்தி செய்து சச்சின் தனது ரசிகர்களின் நீண்ட காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார். மேலும் இந்த சாதனை சர்வதேச அரங்கில் படைத்த முதல் வீரர் என்ற வரலாறு படைத்தார்.
வங்கதேச வீரர் ஷகிப் அல் ஹசன் வீசிய பந்தில் ஒரு சிங்கிள் எடுத்ததன் மூலம் இந்த நூறாவது சத நெருக்கடியிலிருந்து முற்றிலுமாக விடுபட்டார்.

அதிகரிக்கும் கொரோனா… மூன்றாவது டி-20 போட்டிக்கு ரசிகர்களுக்கு அனுமதி இல்லை!

முழு கவனமும்
இந்த சதத்தைத் தனது 138 பந்தில் எட்டினார் சச்சின். அந்த போட்டியில் மொத்தமாக 114 ரன்கள் எடுத்து அவுட் ஆனார் சச்சின். ஆனால் அந்த போட்டியில் இந்திய அணி மொத்தமாக 289 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து வங்கதேச அணி இந்த இலக்கை எளிதாக எட்டியது. அந்த சத்தத்தை ஏற்றியபின் சச்சின் கூறுகையில், “நான் தற்போது தான் முழுவதுமாக விடுபட்டுள்ளேன் என்பதை ஒப்புக்கொள்கிறேன். உலகக் கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் 99வது சதத்தைப் பதிவு செய்தபின் எனது நூறாவது சதத்தைப் பற்றி அப்போது யாரும் பேசவே இல்லை. ஏனென்றால் முழு கவனமும் உலகக் கோப்பை தொடரிலிருந்தது. ஆனால் உலகக் கோப்பை தொடர் முடிந்த பின் அனைவரின் பார்வையும் எனது நூறாவது சதம் பக்கமாகத் திரும்பியது.

அதன் பிறகு நான் இங்கிலாந்து சென்றேன். அனைவரும் அப்பொழுது லார்ட்ஸ் மைதானத்தில் 100வது சதத்தை எட்ட வேண்டும் என்று என்னிடம் தெரிவித்தனர். எனது விருப்பமும் அதுவாகத்தான் இருந்தது. ஆனால் சதம் அடிப்பது அவ்வளவு எளிதல்ல. நீங்கள் நினைக்கும் பொழுது அது உங்களிடம் வந்து விடாது. இதை நான் 99 சதங்கள் அடித்த பின்பும் தற்போது உணர்கிறேன். 100வது சதம் அவ்வளவு எளிதாக இல்லை. இதுதான் எனது வாழ்விலேயே மிகவும் கடினமான சதம்” என்றார்.

சென்னைக்கும் கிரிக்கெட்டுக்கும் கிடைத்த மிகப்பெரிய சொத்து ‘தல’ தோனி: லுங்கி நிகிடி!

ஒரே ஒரு வீரர்
இந்த போட்டிக்குப் பின்பு சுமார் 20 மாதங்கள் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடினார் சச்சின். ஆனால் அதன்பிறகு எந்த ஒரு சதமும் எட்ட முடியவில்லை. மேலும் சொல்லப்போனால் இவர் 90 ரன்களைக்கூட எட்ட முடியவில்லை. இவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று எட்டு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையிலும். இந்த சாதனை படைத்த ஒரே ஒரு வீரர் என்ற சாதனை தற்போதும் தொடர்கிறது. இவரைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் 71 சதங்களுடன் இரண்டாவது இடத்திலும், இந்திய வீரர் விராட் கோலி 70 சதங்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

Views: - 244

0

0

2 thoughts on “நீண்ட காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்த கிரிக்கெட் கடவுள் சச்சின்: சதத்தில் சதத்தை எட்டிய தினம் இன்று!

Comments are closed.