டோக்கியோ ஒலிம்பிக்கில் வெளிநாட்டு ரசிகர்களுக்கு அனுமதியில்லை!

4 March 2021, 7:19 pm
Quick Share

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு வெளிநாட்டு ரசிகர்களுக்கு அனுமதியில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த மார்ச் மாதம் ஜப்பான் அரசு மற்றும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி இணைந்து கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஒலிம்பிக் போட்டிகளை 2021 ஜூலை மாதத்திற்கு ஒத்தி வைப்பது என முடிவு செய்தது. இதற்கிடையில் தற்போது வைரஸ் பரவும் வேகம் குறையாத காரணத்தினால் ஜப்பானில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஒலிம்பிக் போட்டிகளைப் பார்க்க ரசிகர்களை அனுமதிப்பது குறித்து எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை. மேலும் ஏற்கனவே ஒலிம்பிக் போட்டிகளுக்கான டிக்கெட் பெற்றவர்களுக்கு மீண்டும் அந்த தொகையைத் திரும்பக் கொடுப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் ஒலிம்பிக் போட்டிகளுக்கு வெளிநாட்டு ரசிகர்கள் அனுமதிக்கப்படாமல் உள்ளூர் ரசிகர்கள் முன்னிலையில் போட்டிகள் நடக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொதுமக்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கப்படுவதால் வெளிநாட்டு ரசிகர்களுக்கு அனுமதியில்லை என நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த இறுதி முடிவு வரும் மார்ச் 25ம் தேதி ஒலிம்பிக் டார்ச் பயணத்தைத் துவங்குவதற்கு முன்பாக சர்வதேச ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் கமிட்டியுடன் ஆலோசனை மேற்கொண்டு எடுக்கப்படும் என்றும் தெரிகிறது.

ஜப்பான் நாட்டிற்கு வெளியே ஒலிம்பிக் போட்டிகளைக் காண 9,00,000 டிக்கெட்டுகளை ஏற்கனவே ரசிகர்கள் முன்பதிவு செய்துள்ளனர். மேலும் போட்டிகள் நடக்கும் மைதானத்திற்குள் எத்தனை ரசிகர்களை அனுமதிப்பது என்பது குறித்து அடுத்த மாதம் தெரியவரும். ஜப்பானில் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள அவசரநிலை வரும் ஞாயிற்றுக்கிழமையுடன் முடிகிறது. இதனால் இன்னும் இரு வாரத்திற்கு இதே நிலையை நீடிக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

Views: - 1

0

0