டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் : இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் முதல்முறையாக வெற்றி

Author: Udhayakumar Raman
24 October 2021, 11:22 pm
Quick Share

டி20 உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உள்ளது.

7-வது டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் ‘சூப்பர்-12’ சுற்றில், இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் இன்று பாகிஸ்தானை எதிர்கொண்டது. இந்த உலக கோப்பை திருவிழாவில் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்நோக்கும் போட்டி இதுவாகும். இன்றைய ஆட்டம் துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் களமிறங்கினர். பாகிஸ்தானின் ஷகீன் அப்ரிடி முதல் ஓவரை வீசினார். அவர் வீசிய முதல் ஓவரின் 4-வது பந்தில் ரோகித் சர்மா எல்.பி.டபில்யூ. முறையில் ஆட்டமிழந்தார்.

இதனை தொடர்ந்து மீண்டும் ஷகீன் அப்ரிடி வீசிய 3-வது ஓவரின் முதல் பந்தில் கே.எல்.ராகுல் போல்ட் ஆகி அதிர்ச்சியளித்தார். இதையடுத்து ஹசன் அலி வீசிய 6-வது ஓவரில் சூர்யகுமார் யாதவ் கேட்ச் ஆகி விக்கெட்டை இழந்தார். பவர்பிளே முடிவதற்குள் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்தது. இதன் பிறகு ரிஷப் பண்ட் மற்றும் விராட் கோலி ஜோடி சேர்ந்தனர். இவர்கள் சற்று நிதானமாக ஆடி ரன் சேகரிப்பில் ஈடுபட்டனர். இந்த நிலையில் ரிஷப் பண்ட்(39 ரன்கள்) ஷகத் கான் வீசிய பந்தை தூக்கி அடித்த போது கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். இதையடுத்து ஜடேஜாவுடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார்.

இதனை தொடர்ந்து ஹசன் அலி வீசிய 18-வது ஓவரில் ஜடேஜா(13 ரன்கள்) கேட்ச் ஆகி வெளியேறினார். அதே ஓவரின் கடைசி பந்தில் 2 ரன்களை விரட்டியதன் மூலம் விராட் கோலி தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார். இதன் மூலம் சர்வதேச ஆண்கள் டி 20 உலகக்கோப்பையில் அதிக முறை அரைசதம் கடந்த வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார். இதைத்தொடர்ந்து ஷகீன் அப்ரிடி வீசிய 19-வது ஓவரில், விராட் கோலி 57 ரன்களில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஹர்திக் பாண்டியா 2 பவுண்டரிகளை விளாசி 11 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் சேர்த்தது.

இதையடுத்து, 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது.அந்த அணிக்காக கேப்டன் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இந்திய பவுலர்களின் பந்து வீச்சை அஞ்சாமல் அடித்து ஆடி, ரன்களை குவித்தனர் இருவரும். சிங்கிள், டூ, பவுண்டரி, சிக்சர் என ரன் வேட்டைக்கு ரெஸ்ட் கொடுக்காமல் இருவரும் விளையாடினர். பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் 40 பந்துகளில் 50 ரன்களை பதிவு செய்திருந்தார். மறுபக்கம் ரிஸ்வான் 41 பந்துகளில் அரை சதம் பதிவு செய்தார். இருவரும் இறுதி வரை அவுட்டாகாமல் இருந்தனர்.10 விக்கெட் வித்திகயாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. இந்த வெற்றி உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானுக்கு கிடைத்துள்ள முதல் வெற்றி.முகமது ஷமி, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, வருண் சக்கரவர்த்தி, ஜடேஜா என ஐந்து பவுலர்களும் விக்கெட்டுகளை வீழ்த்த தவறினர்.

Views: - 527

0

0