உலகின் மிகப்பெரிய மைதானத்தைத் திறந்து வைக்கும் ஜனாதிபதி: 50,000 ரசிகர்களுக்கு அனுமதி!

23 February 2021, 10:45 pm
World Biggest Ground - Updatenews360
Quick Share

இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன்பாக உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான மோதிரா மைதானத்தை நாளை ஜனாதிபதி ராம் நாத் கோவிந் மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் திறந்து வைக்கவுள்ளனர்.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டியின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று சமநிலையில் உள்ளது. இந்நிலையில் இரு அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி நாளை அகமதாபாத்தில் துவங்குகிறது. உலகின் மிகப்பெரிய மைதானமாகக் கட்டப்பட்டுள்ள மோதிரா மைதானத்தில் நடக்கும் முதல் போட்டி இந்த பகலிரவு டெஸ்ட் போட்டி தான்.

இந்நிலையில் இந்த டெஸ்ட் போட்டியைக் காண சுமார் 50,000 ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக நாளை சுமார் 12 மணியளவில் இந்த மைதானத்தில் இந்திய ஜனாதிபதி ராம் நாத் கோவிந் மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் திறந்துவைக்கின்றனர். தொடர்ந்து மதியம் 2.30 மணிக்குப் போட்டி துவங்கும்.

உலகின் மிகப்பெரிய மைதானமாகக் கட்டப்பட்டுள்ள மோதிரா மைதானம் 63 ஏக்கர் நிலத்திற்கு மேல் பரவியுள்ளது. இதன் மொத்த இருக்கையின் எண்ணிக்கை 1,32,000 ஆகும். இதன் மூலம் தற்போது அதிக ரசிகர்களின் இருக்கையை (90,000) கொண்டுள்ள மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தை விட மோதிரா மைதானம் மிகப்பெரியதாக அமைந்துள்ளது. மேலும் இதன் மொத்த சதுரடி சுமார் 2,38,714 ஆகும். இது 32 ஒலிம்பிக் அளவிலான கால்பந்தாட்ட களத்தை ஒன்று சேர்ப்பதற்குச் சமமாகும். மேலும் இந்த மைதானத்தில் செம்மண் மற்றும் கருப்பு மண் கொண்டு அமைக்கப்பட்ட மொத்தம் 11 பிட்ச்கள் உள்ளது.

Views: - 7

0

0