தரையில் தவழ்ந்து தான் சென்றார்… அஸ்வின் அனுபவித்த மரண வலியைப் பகிர்ந்து கொண்ட மனைவி!

14 January 2021, 5:42 pm
Quick Share

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் சிட்னி டெஸ்டின் போது அனுபவித்த மிகக் கொடுமையான வலி குறித்து அவரது மனைவி ப்ரீத்தி பகிர்ந்துள்ளார்.

இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதிய 3வது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடந்தது. இந்த போட்டி டிராவில் முடிந்தது. இதில் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் 128 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து இந்திய அணி போட்டியை டிரா செய்யக் கைகொடுத்தார். ஆனால் ஐந்தாவது நாள் ஆட்டத்திற்கு முன்பாக அஸ்வின் மரண வலியைத் தாங்கிக்கொண்டதாக அவரின் மனைவி ப்ரீத்தி தெரிவித்துள்ளார்.

நான்காவது நாளின் கடைசி நேரத்தில் அஸ்வின் மிகக்கொடுமையான வலியை அனுபவித்ததாக அவரது மனைவி தற்போது தெரிவித்துள்ளார் . இதுகுறித்து ப்ரீத்தி கூறுகையில், “அது ஒரு பதட்டமான காலையாக அமைந்தது. கடந்த சில ஆண்டுகளில் அஸ்வின் வேதனைகளைத் தாங்கிக் கொள்வதைப் பார்த்துள்ளேன். அதற்குத் தகுதியானவர் அவர் என்பது எனக்குப் புரிந்தது. ஆனால் ஐந்து நாட்களுக்கு முன்பாக அவர் மிகவும் மரண வேதனையை அனுபவித்தார். அவரால் எழுந்து நிற்கக் கூட முடியவில்லை. தரையில் தவழ்ந்தபடியே சென்றார்.

அவரால் எழுந்து நிற்கவோ சாய்ந்து கொள்ளவோ முடியவில்லை. அடுத்த நாளில் அவர் எப்படி விளையாடுவார் என்பதை என்னால் கற்பனை கூடச் செய்து பார்க்க முடியவில்லை. ஐந்தாவது ஆட்டத்திற்குச் செல்லும்போது, அஸ்வின் நான் இன்று விளையாடி ஆக வேண்டும். இதை முடித்தாக வேண்டும் என உறுதியாகத் தெரிவித்துச் சென்றார். நான்காவது நாள் ஆட்டத்தின் இறுதிப்பகுதியில் அவருக்கு ஏற்பட்ட பிரச்சனை முதலில் தெரிந்தது. அவர் இரண்டு மூன்று முறை வலியில் துடித்ததை டிவியில் பார்த்தேன். அதன்பின் அவர் களத்தை விட்டு வந்த பின் அவரிடம் உடனடியாக உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லையே என்று கேட்டேன். அதற்கு அவர் நான் பவுலிங் செய்ததை நீ பார்க்கவில்லையா என்றார்.

ஆனால் பின்பகுதியில் வலி இருப்பதாகவும் தெரிவித்தார். பின்னர் ஐந்தாவது நாள் காலை எழுந்து வார்ம் அப் செய்த போது வித்தியாசமான செய்து கொண்டிருந்தார். இது எனக்குக் கவலை அளித்தது. அதன் பின்னர் அவர் பிசியோவிடம் சென்றார். மேலும் வலியால் துடித்தது காணமுடிந்தது. மற்ற வீரர்களும் காயம் அடைந்து உள்ளார்கள் எனத் தெரிகிறது. ஆனால் இந்த தொடர் தற்போது முடியவில்லை என்பதால் எப்படி மீதியுள்ள போட்டியில் அவர்கள் எதிர்கொள்ள உள்ளார்கள் எனத் தெரியவில்லை.

ஒரு குடும்ப உறுப்பினராக எப்போதும் எங்கள் உணர்வு அவர்களிடமிருந்து வித்தியாசமாகத்தான் இருக்கும்
வெற்றிக்காகக் கடுமையாகப் பாடுபட வேண்டும் எனப் புரிந்தாலும், ஆனால் வீரர்கள் காயத்தின் போதும் கடினமாகக் களத்தில் கஷ்டப்படுவதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. சிட்னி போட்டிக்குப் பின் அஸ்வின் அறைக்கு வந்தபோது நாங்கள் சிரித்தோம், அழுதோம் ஆனால் மெல்போர்ன் வெற்றிக்குப் பின் இருந்த உணர்வை விட இது ஒரு வித்தியாசமான உணர்வாக இருந்தது” என்றார்.

Views: - 14

0

0