ஐசிசி சிறந்த வீரர்: அஸ்வின், ஜோ ரூட் பெயர்கள் பரிந்துரை!

2 March 2021, 7:47 pm
Quick Share

கடந்த மாதத்திற்கான ஐசிசி சிறந்த வீரர்கள் பட்டியலில் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், ஜோ ரூட், கைல் மேயர்ஸ் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. 


கடந்த மாதம் (பிப்ரவரி) ஐசிசி சிறந்த வீரருக்கான விருதுக்கான பட்டியலில் இந்திய சீனியர் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அனைத்து விதமான போட்டிகளிலும் சிறப்பாகச் செயல்படும் வீரர்கள் வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு மாதம்தோறும் விருது வழங்கி ஐசிசி கவுரவித்து வருகிறது. இந்த விருதுக்கான பட்டியலில் பிப்ரவரி மாதத்திற்கு, இங்கிலாந்து அணிக்கு எதிராகச் சிறப்பாகச் செயல்பட்ட ரவிச்சந்திரன் அஸ்வின் பெயர் இடம் பெற்றுள்ளது.


இங்கிலாந்து கேப்டனான ஜோ ரூட் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கையில் மேயர்ஸ் ஆகியோரின் பெயர்களும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இங்கிலாந்து அணிக்கு எதிராக தற்போது மூன்று போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின் சென்னையில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்சில் சதம் அடித்து அசத்தினார். அதேபோல அகமதாபாத்தில் நடந்த 3வது டெஸ்ட் போட்டியில் டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் 400 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
இந்த மூன்று டெஸ்ட் போட்டியில் 176 ரன்கள் எடுத்துள்ளார் அஸ்வின். தவிர, மொத்தமாக 24 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.

சிறந்த வீரருக்கான விருதைப் பெறுவதற்கு இவர் தகுதியான போட்டியாளர் என்பதை நிரூபித்துள்ளார். இதேபோல இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் என இரண்டிலும் மிரட்டியுள்ளார். இந்திய அணிக்கு எதிராக 3 டெஸ்ட் போட்டிகளில் மொத்தமாக 333 ரன்கள் மற்றும் 6 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இவர் விளாசிய இரட்டை சதம் இங்கிலாந்து அணி வெற்றி பெறப் பெரிய அளவில் உதவியது.
அதேபோல வெஸ்ட்இண்டீஸ் வீரரான மேயர்ஸ் வங்கதேச அணிக்கு எதிராக இரண்டு போட்டிகளில் பங்கேற்றார். இதில் ஒரு இரட்டை சதம் விளாசி வெஸ்ட் இண்டீஸ் அணி 395 ரன்களை வெற்றிகரமாக எட்ட கைகொடுத்தார். இந்நிலையில் கடந்த மாதம் (ஜனவரி) சிறந்த வீரர் விருதை இந்திய விக்கெட் கீப்பர் ரிசப் பண்ட் வென்றது குறிப்பிடத்தக்கது.

Views: - 11

0

0